அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம்: ரூ. 17 லட்சத்தில் புதிய வீடுகள் - அரசு விளக்கம்!

அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம்: ரூ. 17 லட்சத்தில் புதிய வீடுகள் - அரசு விளக்கம்!
Published on

சென்னை அடுத்த அனகாபுத்தூரில் அடையாற்று கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் அடையாற்று கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.

அந்த வகையில் சென்னை அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. வீடுகள், கட்டடங்களை பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு நடுவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அப்புறப்படுத்தினர். குறிப்பாக காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு பகுதிகளில் ஆற்றை ஆக்கிரமித்திருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அனகாபுத்தூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களை சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, வீடுகளை இடிக்கும் முடிவை கைவிடவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அடையாறு நதியை சீரமைக்க ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு தமிழக அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாற்றை புனரமைத்து கரையோரப் பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமான ஒன்று என்று தெரிவித்துள்ளது.

அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன என்றும், ஒவ்வொரு வீடும் 17 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை விளக்கம் அளித்துள்ளது.

ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட உள்ளன. குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுவதற்கான படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ.2500 என்ற அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு ரூ.30,000, மின்சார இணைப்பு கட்டணம் ரூபாய் 2500 என வழங்கப்பட உள்ளது.

அத்துடன், உயர் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்றும், மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வருவதாகவும், இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com