“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் அறிவாலயத்தின் ஒரு செங்கல்லைக் கூட பிடுங்க முடியாது” என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து செல்லும் போது திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன் என்றார்.
மேலும் தமிழக ஆளுநராக ஆர்என் ரவியும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சத்தில்தான் பேயுள்ளார் என்றும் அண்ணாமலை காட்டமாக கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ்நாட்டு அரசியலை கரைத்துக் குடித்தவர்கள்,
அண்ணாமலையை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவின் ஆலயமாக கருதப்படுகிற அறிவாலயத்தை தொட்டு கூட பார்க்க முடியாத அவரால், எப்படி செங்கல்லை பிடுங்க முடியும். இரும்பு மனிதர் என போற்றப்படுகின்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், 75 ஆண்டுகள் கடந்த திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.
திமுகவை அழிக்க புறப்படுபவர்கள், தங்களின் அழிவுக்கு தொடக்கப்புள்ளி வைக்கின்றனர். இவருடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். முதலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அண்ணாமலை எங்கு நின்றாலும் அவரே புறமுதுகிட்டு ஓடச் செய்ய திமுக கடைகோடி தொண்டனை நிற்க வைத்து முதல்வர் ஸ்டாலின் அவரை மண்ணை கவ்வ வைப்பார்.” என்றார்.