சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது, தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று 10.30 மணிக்கு தீர்ப்பை வாசித்தார்.
அதில்,“அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி” என அறிவித்தார். மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பிரிவுகளில் 11 பிரிவுகளிலும் அவர் குற்றவாளி நிரூபிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரிதிலும் அரிதான வழக்கு எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஞானசேகரன் கோரிக்கை வைத்தார். தனக்கு பெண்குழந்தை உள்ளது எனவும் 8 வது படிக்கிறார் என்றும் அம்மா மட்டும் தான் அப்பா இல்லை. அம்மாவுக்கும் உடல்நலமில்லை என்றெல்லாம் சொல்லி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி, தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் அளித்து 5 மாதத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.