Supreme Court
உச்சநீதிமன்றம்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர். நகல், இணையதளத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'எப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர். கசிவு தொடர்பாக தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அப்போது, 'மாணவியை பாதுகாக்க எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம்' என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு எப்.ஐ.ஆர். நகல் இணையத்தில் வெளியிட்டது யார்? இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.? எவ்வளவு நேரம் டவுண்லோடு செய்யும் நிலையில் எப்.ஐ.ஆர். இருந்தது? தற்போது இணையத்தில் மாணவியின் தரவுகள் உள்ளதா?

மாணவிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையை எப்.ஐ.ஆர். வெளியானதற்கு காரணமாக இருந்தவர்களிடம் வசூல் செய்ய வேண்டும்.

எப்.ஐ.ஆர். பதியும் முன் மாணவிக்கு உரிய ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் செயல்கள் தான் குற்றச்செயல் நடப்பதற்கு காரணம் என்று சித்தரிக்கும் வகையில் எப்.ஐ.ஆர். உள்ளது. மாணவி மீதே பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து,சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com