2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 24 மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரை உள்ளிட்டவைகளுக்கு சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பாலபுரஸ்கார் விருது விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றைச்சிறகு ஓவியா’ என்ற சிறார் நாவலுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், யுவபுரஸ்கார் விருது ’கூத்தின்று கூடிற்று’ என்ற சிறுகதை தொகுப்பு எழுதிய லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலபுரஸ்கார் - விஷ்ணுபுரம் சரவணன்
திருவாரூரில் உள்ள விஷ்ணுபுரம் என்னும் ஊரில் பிறந்த சரவணன், கவிஞர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார்.
தமிழின் பிரபல வார இதழ்களிலும், சிறார் இதழ்களிலும் பணியாற்றியவர். தொடக்கத்தில் கவிதைகள் வழியாக தமிழ் இலக்கிய வட்டத்துக்குள் நுழைந்த இவர், காலப்போக்கில் குழந்தைகள் கதை சொல்லியாகவும், தற்போது முழுக்க முழுக்க குழந்தைகள் இலக்கியத்தில் பங்காற்றி வருகிறார். பத்துக்கும் மேற்பேட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். இவரின் ‘கயிறு’ என்ற கதை விற்பனையில் அசத்தியது.
யுவபுரஸ்கார் - லட்சுமிஹர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர். தற்போது திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார். உயிர்மை போன்ற அச்சு இதழ்கள், கனலி, வாசகசாலை, கலகம், யாவரும் போன்ற இணையதளங்களில் இவரின் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் யாவரும் வெளியீடாக வந்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டு வாசகசாலையின் 'சிறந்த அறிமுக எழுத்தாளர்' விருதுபெற்றவர் இவர்.