விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் (ஜூன் 27) திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73), என்பவர் தனது மகள் நிகிதாவுடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில், கோயில் தற்காலிக பாதுகாப்பு ஊழியர் அஜித் (29) வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது, கார் சாவியை அஜித்திடம் கொடுத்த காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர்.
அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாததால் அருகிலிருந்தவரிடம் காரை பார்க் செய்ய சொல்லியுள்ளார். தரிசனம் முடிந்து காருக்கு வந்த நிகிதா, பின் சீட்டில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்துள்ளார். நகை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர், அஜித்திடம் விசாரித்துள்ளார். அவர் உரிய பதில் சொல்லாததால் சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில், அஜித் உட்பட சிலரிடம் போலீசார் நேற்றுமுன் தினம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவர்களை வீட்டுக்கு அனுப்பிய போலீசார், நேற்று மீண்டும் அஜித்தை காவல் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, மயங்கி விழுந்த அஜித்தை உடனே திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்தாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து அஜித்தின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காவல் துறையினர் தாக்கியதால்தான் அஜித் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவிட்டதுடன் வெளிப்படையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.