“பெரியார் கொள்கையை கூறி வாக்கு சேகரிக்க தயாரா?”– ஆவேசப்பட்ட சீமான்

நாதக சீமான்
நாதக சீமான்
Published on

பெரியாருடைய சித்தங்களைப் பற்றி பேசி வாக்குச் சேகரிக்க யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

“உலகம் எங்கும் வாழும் எனது சொந்தங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். தமிழ் இன மக்கள் தமிழ் மொழியை மீட்டு, தங்களுடைய வரலாற்றை பாதுகாக்க வேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். நாதக வேட்பாளரை பொங்கல் தினத்தன்று அறிவிப்போம்.

பொங்கலன்று யு.ஜி.சி. தேர்வை நடத்தும் மத்திய அரசு வட இந்திய பண்டிகைகளின் போது தேர்வு நடத்துமா?. தமிழகத்தில் கேட்க ஆளில்லாததால் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது.

திமுகவுக்கு வாக்கு செலுத்தி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்.

பெரியாருடைய சித்தாங்களைப் பற்றி பேசி வாக்குச் சேகரிக்க யாராவது தயாராக இருக்கிறீர்களா? தடை செய்யப்பட்ட இயக்கம், பயங்கரவாதி என பழிசுமத்திய என் தலைவனைப் பற்றி பேசி நான் வாக்கு சேகரிக்க தயாராகவுள்ளேன்.

அப்படி சேகரித்துதான் 36 லட்சம் வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்றேன். பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? பெண்ணுரிமை பற்றிப் பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உள்ளது. வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்.

திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார். பெரியார் மணியம்மையை திருமணம் செய்தபோது ஆரியர் ராஜாஜியை துணைக்கு அழைத்தார்.” என்று பேசினார்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளா்களுடன் பேசும்போது, பெரியாா் குறித்து அவதூறாக பேசியதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து, தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சியினர், திராவிட கழகத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகாா்கள் தெரிவிக்கப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பெரியார் குறித்து அவதூறாக பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com