முப்படை பாதுகாப்பை ’ஆஷஸ்’ கிரிக்கெட் தொடருடன் ஒப்பிட்ட ராணுவ அதிகாரி!

செய்தியாளர் சந்திப்பில் முப்படைகளின் தளபதி
செய்தியாளர் சந்திப்பில் முப்படைகளின் தளபதி
Published on

இந்தியாவின் தரை, வான், கடல் பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பதை ஆஷஸ் கிரிக்கெட் தொடருடன் ஒப்பிட்டு ஜெனரல் ராஜீவ் கய் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை குறித்து ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, “பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை. தீவிரவாதிகளை குறிவைத்துத்தான் நடத்தப்பட்டது. நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரானது அல்ல; பயங்கரவாதிகளுக்கு எதிரானது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் நம் மீது தாக்குதல் நடத்தியது. வலிமையான சுவர் போன்ற நமது வான் பரப்பைத் தாக்குவது அவ்வளவு எளிதல்ல. பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது. உள்நாட்டுத் தயாரிப்பான ஆகாஷ் வான் பாதுகாப்பு தளவாடம் இதில் முக்கிய பங்காற்றியது. எல்லையைப் பாதுகாக்க அனைத்து வகையிலும் இந்திய ராணுவம் உறுதி பூண்டிருந்தது. பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பு.

இது ஒரு வித்தியாசமான போர். இது நிச்சயம் நடக்கத்தான் செய்யும். நாம் மற்றும் ஒரு போரில் ஈடுபட்டால் அது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இது ஒரு பூனை – எலி விளையாட்டு. எதிரியை வெல்ல நாம் முன்னேற வேண்டும்.”என்றார்.

பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படைத் தளம் தாக்கி அழிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுப் பேசிய இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், “கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிவிட்டது. அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். நமது விமான நிலையங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களைக் குறி வைப்பது முகவும் கடினம்.

விராட் கோலியின் ஒய்வு அறிப்பைப் பார்த்தேன். எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர். 1970 களில் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பந்துவீச்சாளர்களான ஜெஃப் தாம்சன், டென்னிஸ் லில்லி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். அப்போது, “சாம்பலுக்கு சாம்பல், தூசிக்கு தூசி”. தாம்சன் உங்களை வீழ்த்தவில்லை என்றால் லில்லி கட்டாயம் வீழ்த்துவார் என்ற ஒரு பழமொழியை ஆஸ்திரேலியர்கள் கொண்டு வந்தார்கள்.

இந்திய பாதுகாப்பு அடுக்குகளைக் கவனித்தால் நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும். எல்லா அடுக்குகளையும் கடந்த செல்ல முடிந்தாலும், ஏதாவது ஒன்று உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஏ என் பிரமோத், “பாகிஸ்தான் அத்துமீறலை எதிர்கொள்ள அனைத்து படைப்பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன. போர்க்கப்பலிலிருந்து விமானங்களை இயக்கவல்ல சக்தி கொண்டதாக கடற்படை இருக்கிறது’ என்றார்.

இந்த சந்திப்பில், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com