“ஏடிஜிபியை கைது செய்யுங்கள்...” நீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?

ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார். தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி ஜெயராமனின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி- ஜெயராமனுக்கும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார். இதையடுத்து, இந்த வழக்கில், ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், தவறு செய்யவில்லை என்றால், எதற்காக காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள் என ஜெகன் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, தவறு செய்யவில்லை என்றால் அச்சம் இல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறினார்.

தொடர்ந்து இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை உடனடியாக கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக காவல் துறை வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com