தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ என்ற நூலின் இரண்டாம் பாகம் வருகின்ற 17ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படுகிறது.
துர்கா ஸ்டாலின் எழுதிய ’அவரும் நானும்’ என்ற நூல் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த புத்தகத்தில் ஸ்டாலினைப் பற்றி ஒரு மனைவியாக துர்கா பல தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ நூலின் இரண்டாம் பாகம் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படுகிறது.
நூலை சுப்ரியா சுலே எம்.பி வெளியிட முதல் பிரதியை எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொள்கிறார்.
விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி வரவேற்புரையும், கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதிப்பாளர் உரையும், பத்திரிகையாளர் லோகநாயகி நூல் அறிமுக உரையும், முன்னாள் நீதிபதி பவானி சுப்பராயன், டாபே குழும நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன், ஜி.ஆர்.ஜி. நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
நூல் ஆசியர் துர்கா ஸ்டாலின் ஏற்புரையும், உயிர்மை நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் நன்றியுரையும் ஆற்றுகின்றனர். உயிர்மை பதிப்பகம் சார்பில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.