பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான கோபால் கெம்கா அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் கொல்லப்பட்ட நிலையில், இப்போது தந்தை கொல்லப்பட்டுள்ளார்.
பீகாரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா கொல்லப்பட்ட சம்பவம் மூலம் பாஜகவும் நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றியுள்ளனர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
தற்போது, பீகார் மாநிலம் கொலை, கொள்ளை, துப்பாக்கிச் சூடு போன்றவற்றின் நிழலில் வாழ்கிறது. குற்றச் சம்பவம் இங்கே வாடிக்கையாகிவிட்டது - இங்கே அரசாங்கம் நடக்கவில்லை.
பீகாரின் சகோதர சகோதரிகளே, இந்த அநீதியை இனியும் பொறுத்துக்கொள்ளக் கூடாது, உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத இந்த அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்காது.
அநீதிக்கு எதிராக எழுந்து நின்று, ஒரு புதிய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வாக்களிக்க வேண்டும்.
ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும் - மாற்றத்திற்கான முழக்கம். இப்போது ஒரு புதிய பிகாருக்கான நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.