பா.ஜ.க. பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை: பி.டி.ஆர்.கார் மீது செருப்பு வீசியவர்!

படுகொலை செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகி சரண்யா
படுகொலை செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகி சரண்யா
Published on

பாஜக பெண் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்தான் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியவர் என்பது தெரியவந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி சரண்யா என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் மதுரை மத்திய தொகுதி பாஜக மகளிர் அணி பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய மூன்று பேர் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சரணடைந்த கபிலன் என்பவர், கொலை செய்யப்பட்ட சரண்யா கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் ஆவார். பாலனின் சொத்துக்களை கபிலனுக்கு அளிப்பதில் சரண்யா மறுப்பு தெரிவித்த காரணத்தால் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

யார் இந்த சரண்யா?

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளராக கருதப்படும் சரண்யா, மகளிர் அணி, நெசவாளர் அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

அண்ணாமலையின் பதவி பறிப்புக்குப் பின்னர், இவர் கட்சி செயல்பாடுகளில் அதிகம் பங்கேற்கவில்லை என கூறப்படுறது. இவர்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசியவர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த லட்சுமணன், பணியின் போது வீரமரணமடைந்தார். அப்போது அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பாஜகவினர் சிலர் அவரது காரை வழிமறித்து, தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் செருப்பை வீசினர். செருப்பு வீசியதாக பாஜக மகளிரணியை சேர்ந்த சரண்யா உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com