என்  தந்தைக்குள் இருந்த திருக்குவளை முகம்!  கனிமொழி எம்.பி சுவாரசியப் பேச்சு!

Puduvai Ilavenil book release event
நிச்சலனத்தில் நிகழ்வெளி நூல் வெளியீட்டு விழா
Published on

புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில் எழுதிய 'நிச்சலனத்தின் நிகழ்வெளி ' நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற  உறுப்பினர் து.ரவிக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நூலை வெளியிட்டார். ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் நூலின் முதற்படியைப் பெற்றுக் கொண்டார் .இரண்டாம் படியை ஒளிப்பதிவாளர் வைடுஆங்கிள் ரவிசங்கரன்  பெற்றுக் கொண்டார்.

தலைமையேற்று நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் பேசும்போது, "இந்தப் புத்தக முயற்சி மிகவும் செலவு பிடிக்கும் ஒன்று.  நான் ஒரு பதிப்பாளர் தான். நான் என்றால் இதைச் செய்ய மாட்டேன். இதை டிஸ்கவரி வேடியப்பன் செய்திருக்கிறார். இந்த மாதிரி வகையினத்தில் புத்தகங்கள் வருவது குறைவு அதை இளவேனில் செய்திருக்கிறார்.

புகைப்படம் என்பதில் எல்லோருக்கும் ஈடுபாடு உண்டு. எல்லாரும் கையிலும் மொபைல் போன் இருக்கிறது, கேமரா இருக்கிறது.

 என்னைப் புகைப்படம் எடுக்கும் போது எனக்கு ஒரு அச்சம் இருக்கும் நம்மை விகாரமாக எடுத்து விடுவார்களோ என்று.

இன்று சுற்றிலும் கேமரா சூழ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் இங்கு பதிவாகிக் கொண்டிருக்கிறது. அது எங்கே சேமிக்கப்படுகிறது பரவிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

இந்தப் புத்தகத்தில் அந்த ஆளுமைகளை எப்படியெல்லாம் படம் எடுத்தார் என்று இளவேனில் எழுதி இருக்கிறார் .

எங்கே வார்த்தைகள் போதாமல் தோற்றுப் போகிறதோ அங்கே தான் ஓவியமும் போட்டோகிராபியும் தோன்றுகிறது என்று நான் நினைக்கிறேன்.

போட்டோக்களுடன் நிறைய வார்த்தைகள் இருக்கக் கூடாது. போட்டோ மட்டும் பேச வேண்டும்.அடுத்த புத்தகத்தில் இந்த வார்த்தைகளைக் குறைக்கலாம்.

இந்த புத்தகத்தில் இருக்கிற புகைப்படங்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம் ஒன்னு ஸ்டில் போட்டோகிராபி சொல்லி அவர்களை நிற்க உட்காரச் சொல்லி எடுத்திருப்பவை. இன்னொன்று அவர்கள் எதிர்பாராத தருணத்தில் எடுத்தவை.இதற்கு பிரபஞ்சன் சிகரெட் குடிப்பது போல் எடுத்த படம் ஒரு உதாரணம்.எங்கே அகத்தோற்றமும் புறத்தோற்றமும் முயங்கி வருகிறதோ அப்போது அங்கே எடுக்கிற புகைப்படம் நன்றாக இருக்கும்.

நாம் எடுக்கிற படம் நம் படம் தானா? நாம் எப்போதுமே ஒரு போலியான தோற்றத்தையே விரும்பிக் கொண்டிருக்கிறோம்.சந்தோசமோ துக்கமோ எதிர்பாராத தருணத்தில் பிடிபடும் அந்த படம் வேறு வகையானது. அப்படி அரிதாகத்தான் அமையும் .அப்படி  சுனாமியின் போது எடுக்கப்பட்ட  கடற்கரையில் விழுந்து கிடக்கும் பெண்ணின்  போட்டோ பரிசுகள் எல்லாம் பெற்றது.

ஒரு புகைப்படம் நிச்சலனமாக இருக்குமா? அது மாறிக்கொண்டே இருக்கும்.உயிர்த் துடிப்புடன் தான் இருக்கும். எந்தப் புகைப்பட மும் உறைநிலையில் இருப்பதில்லை. அதைப் பார்க்கப்படுபவரால் அதன் பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது.

எந்தப் போட்டோவும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பொருளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கும்.

கனிமொழி அவர்கள் அரசியலே வேண்டாம் என்று இருந்த காலத்தில் அவரிடம் இருந்த இன்னொசென்ஸ் தெரியும்படி எடுக்கப்பட்ட படம் மிகச் சிறப்பாக இருக்கும்.

நமக்குப் பிடித்தவர்களை நம் விருப்பங்களை நமது பிரதிநிதியாக இருந்து பதிவு செய்து இந்தப் புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் இளவேனில்.

இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதை எல்லாம் தாண்டி இந்தக் கலைகளைக் காப்பாற்ற வேண்டும்," என்றார்.

Kanimozhi MP at event
விழாவில் கனிமொழி, ரவிகுமார் மற்றும் பி சி ஸ்ரீராம்

விழாவில் நூலை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசும்போது,

”இளவேனில்  'நிச்சலனத்தின் நிகழ்வெளி ' நூலை வெளியிட என்னிடம் நீண்ட நாட்களாகத் தேதி கேட்டுக் கொண்டிருந்தார்.அவர் கேட்கிற தேதியில் ஏதாவது பிரச்சினை வரும், அல்லது வேறு எங்கேயாவது இருக்க வேண்டி இருக்கும்.

தேதி சரியாக அமையவில்லை. நானே சொல்லி இருக்கிறேன், நீங்களே வெளியிட்டு விடுங்களேன் என்று. அதெல்லாம் முடியாது நீங்கள் என்றைக்கு வருகிறீர்களோ அன்றைக்குத்தான் புத்தகத்தை வெளியிடுவேன் என்று அவ்வளவு பிடிவாதமாக இருந்தார்.அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த  'நிச்சலனத்தின் நிகழ்வெளி '  என்கிற புத்தகத்தைப் பார்க்கும் போது, கி.ரா நினைவுக்கு வருகிறார். தொடர்ந்து நான் ஒவ்வொரு முறை கி.ராவைச் சந்திக்கும் போது உடன் இருந்தவர் இளவேனில். கி.ராவுக்கு நினைவு  மண்டபம் ஒன்று அமைப்பது என்று தீர்மானித்தபோது அவருக்குச் சிலை ஒன்று வைப்பது என்று முடிவானது.அதற்கு இளவேனிலின் புகைப்படத்தைத்தான் பயன்படுத்திக் கொண்டோம்.அங்கே சிலையாக இருப்பது இவரது புகைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட வடிவம் தான்.

இளவேனிலிடம் பேசும் போதே  மகிழ்ச்சி வரும். அந்த அளவிற்கு மனிதர்களை நேசிக்கக் கூடிய மனிதர்.

மனிதர்கள் எப்போதும் தங்களுக்கே தடைகளை உருவாக்கிக் கொள்வார்கள்.யாரும் அருகில் வந்து விடுவார்களோ என்றும் அச்சப்படுவோம். எல்லாரும் சூழ்ந்திருக்க வேண்டும் என்றும் விரும்புவோம்.யாரும் நாம் அருகே வந்து விடக்கூடாது என்று தடைகள் உருவாக்கிக் கொள்வதுண்டு.இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இருக்கக்கூடிய மனிதர் இளவேனில்.

 அப்படித் தடை தாண்டி நிற்கக் கூடிய ஒரு கலைஞனைத் தான் இந்த புத்தகத்தில் நான் பார்த்தேன். கி.ரா வின் புகைப்படங்கள் ஆகட்டும் ரவிக்குமாரின் இளமையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகட்டும் அதைத்தான் பார்க்கிறேன்.

ரவிக்குமார் தொடர்ந்து தன்னை யாரும் நன்றாகப் படம் எடுப்பதில்லை என்று புகார் சொல்வார். அவரை இவர் நன்றாக எடுத்துள்ளார்.

இங்கே என் புகைப்படத்தைப் பார்த்து  ரவிக்குமார் ,ஒரு காலகட்டத்தில் இன்னசென்ஸ் இருந்த காலகட்டம் என்று கூறினார். அதேபோல் தான் அவருக்கும் இன்னசென்ஸ் இருந்த காலகட்டம் என்று சொல்வேன். இப்படி முக்கியமான நிறைய புகைப்படங்கள், நல்ல நல்ல புகைப்படங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. 

 நான்தான் இளவேனிலைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.(சிரிப்பு..) சின்ன வயதில் அம்மா பூவெல்லாம் வைத்து தலைவாரி விட்டு இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் ,எவை எல்லாம் வரக்கூடாது,யாரும் பார்த்து விடக்கூடாது என்று நினைத்தேனோ அதை எல்லாம் இதில் வெளியிட்டுள்ளார். நான் எந்தப் படங்களை எல்லாம் வெளிவரக் கூடாது என்று நினைத்தேனோ,20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு எதையெல்லாம் ஒளித்து வைத்து யாரும் பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அதை எல்லாம் இவர் இந்த புத்தகத்தில் வெளியிட்டு விட்டார் . அவர் எந்த பேச்சையும் கேட்க மாட்டார். அதுதான் அந்தக் கலைஞனின் உண்மையான குணம். எந்த நேரத்திலும் மகிழ்ச்சியையும் புன்னகையையும் வர வைக்கக்கூடிய ஒரு அற்புதமான மனிதர் அவர்.

 கி.ராவின் புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர் கண்களில் எத்தனை அடுக்குகள் இருக்கின்றன என்று தோன்றும். அந்தக் கண்கள் வழியாகவே கி.ராவுக்குள் நுழைந்து விடலாம்.

அப்படி ஒரு அற்புதமான புகைப்படத்தை எடுத்து இருக்கிறார்.

 எல்லாராலும் எழுத முடியாது பேச முடியாது என்று சொல்வார்கள். அது போல எல்லாராலும் இப்படிப் படங்களை எடுத்து விட முடியாது. நாம் நன்றாக எடுக்க நினைப்போம். நாம் கேமரா வழியாக நாம் எடுத்த படத்தை நாம் பார்த்திருக்கிறோமா என்றால் இல்லை.படம் நன்றாக அமைவது தற்செயலாக நடக்கக்கூடிய ஒன்று.

எல்லாராலும் நல்ல புகைப்படங்களை எடுத்து விட முடியாது. அதற்கென்று ஒரு தேடல் வேண்டும்; அதற்கென்று ஒரு மனநிலை வேண்டும்.இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய விதம் எல்லாம் ஒரே கண்ணோட்டத்தில் இருந்தால் தான் அந்தப் புகைப்படம் நன்றாக வரும்.

 என் அப்பாவிடம் நான் நீண்ட நாளாக உணர்ந்தது அவரிடம் எப்போதும் அந்த திருக்குவளை இருந்து கொண்டே இருக்கும்.அவர் சென்னையில் இருந்தாலும் எத்தனை முறை முதலமைச்சராக இருந்தாலும் அந்த திருக்குவளை, அங்கிருந்த இளைஞன், அந்த ஊர் அவரிடம் இருந்து கொண்டே இருக்கும். இறுதி நாட்கள் வரை இந்த திருக்கு வளை மனிதர் இருந்து கொண்டே இருந்தார்.அவர் டெல்லியில் இருந்தாலும் பிரதமர்களை முடிவு செய்யக்கூடிய இடத்தில் இருந்தாலும் இந்த திருக்குவளை மனிதர் எப்போதுமே இருந்து கொண்டே இருப்பார்.அவரை எத்தனை பேர் படங்கள் எடுத்திருந்தாலும் ரவிசங்கர் சுபமங்களாவுக்காக எடுத்திருந்த படங்களில் மட்டும் தான் அந்த திருக்குவளை மனிதர் தெரிந்தார்.அப்போது தரையில் அமர்ந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் அப்படித் தெரிந்தார். காரணம் அது தரையில் அமர்ந்து எடுக்கப்பட்டதால் மட்டுமே அல்ல .பல தடைகளைத் தாண்டி ஒரு தேடலில் அந்தக் கலைஞனால் தான் அந்த திருக்குவளை மனிதரை எடுக்க முடிந்தது.அதைத்தான் இளவேனிலின் ஒவ்வொரு புகைப்படத்திலும் பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு மனிதர் தான் எங்கு எதை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்களோ எதை வாழ்க்கை முழுவதும் தனக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ  அது முக்கியம் .பிரபஞ்சனிடம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு கம்பீரம் இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாத திமிர் இருக்கும். அதுதான் பிரபஞ்சன்.அதுதான் அவரது பெரிய அழகு. அது இளவேனிலின் புகைப்படங்களில் வெளிப்பட்டுள்ளது.அப்படி அவர்கள் எதைப் பாதுகாத்தார்களோ அதை, தான் எடுக்கக்கூடிய புகைப்படங்களில் பதிவு செய்து அதையே அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கக்கூடிய கலைஞன் தான் இளவேனில்.

 சேகுவேரா வின் படங்களில் ஆல்பர்ட்டோ எடுத்த புகைப்படம் தான் தலைமுறை தாண்டியும் நிலைத்து நிற்கிறது.யார் யாரோ சே பற்றி தெரியாதவர்கள் எல்லாம் டி-ஷர்ட்டில் போட்டுக் கொண்டு செல்கிறார்கள் என்றால் அந்தப் படத்தில் உள்ள கம்பீரம் தான் காரணம்.படம் மட்டுமே அவரைப் போராளி என்று சொல்லும் . அந்தப் படமே ஒரு கதை சொல்லும்.

அப்படிப்பட்ட படங்களை எடுக்கக் கூடிய இளவேனில் தனது பயணத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இங்கே இருக்கும் ரவிசங்கரும் நல்ல படங்களை எடுத்திருக்கிறார். நிறைய படங்கள் எடுத்திருக்கிறார் . அவரும் ஒரு புத்தகம் கொண்டு வர வேண்டும்.

இளவேனில் தொடங்கியுள்ளார் .ரவிசங்கர் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தமக்குள் எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது பகிர வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன்''

இவ்வாறு கனிமொழி பேசினார்.

விழாவில் நினைவுப்பரிசு வழங்குதல்
விழாவில் நினைவுப்பரிசு வழங்குதல்

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பேசும் போது, "ஒளிப்பதிவாளர்களும் அதிகம் பேசக்கூடாது. காத்திருத்தல் நமது வேலை .எப்போது அந்தப் படம் வரப்போகிறது என்று அந்த தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டும். என் வாழ்க்கையில் பிடிப்பு கொடுத்த ஒரே விஷயம் ஒரு கேமரா பெட்டி தான் .அது எங்கள் தாத்தா வாங்கிக் கொடுத்தது. அதுதான் என் வாழ்க்கையையே மாற்றியது. எதுவுமே பிடிப்பில்லாமல் நான் இருந்த போது அப்பா அம்மா பயந்தார்கள்.அந்த காலகட்டத்தில் தாத்தா வாங்கி கொடுத்த  அந்தக் கேமரா வழியாக பார்க்கும் போது எனக்கு ஒரு அமைதி கிடைத்தது. அந்த நேரம் நான் அந்தளவுக்கு தொந்தரவு தரும் குழந்தையாக இருந்தேன்.

 என்னைப் பற்றி எனது அப்பா அம்மா மிகவும் பயந்தார்கள் இவன் பெரிய பொறுக்கி ஆகி விடுவானோ என்று.எனது பெரியம்மா சரஸ்வதி ராமநாதன் தான் அவன் வருவான் வருவான் என்று நம்பிக்கை தந்தார்கள்.

 எல்லாரும் படிக்கும்போது நான் மட்டும் படிக்க வில்லை என்றால் எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று அப்பா சொல்வார் .அது எனக்குப் புரிகிறது ஆனால் எனக்குப் படிப்பு ஏறவில்லை என்ன செய்வது என்பேன் நான்.எப்போது அந்தக் கேமரா பெட்டி என் கையில் வந்ததோ அப்போது என் வாழ்க்கையே மொத்தமாக மாறியது.பள்ளி கல்லூரிகளில் எல்லாம் நான் படித்ததே கிடையாது திரைப்படக் கல்லூரி போன பிறகுதான் நான் படித்தேன் பயங்கரமாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனக்கு உலகமே தெரியவந்தது.அந்த கேமரா மூலம் தான் எனக்குள் பெரிய உத்வேகமும் மாற்றமும் வந்தது.

எல்லோரும் ஒதுக்கினாலும் நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல்  போய்க் கொண்டே இருந்தேன்.

 எதுவுமே இல்லாமல் குட்டிச்சுவரில் உட்கார்ந்து கொண்டு, போகிற வருகிற பெண்களை பார்த்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தப் பிடிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அந்த கேமரா.

எல்லாரும் கேட்பார்கள் யார் அழகு என்று. எல்லாமே அழகுதான் எல்லாருமே அழகுதான்.இதுதான் அழகு அது தான் அழகு  ஐஸ்வர்யாராய் தான் அழகு என்றால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.ஐஸ்வர்யாராயின் அந்த அழகு என்னைத் தொந்தரவு செய்யும். அழகை நான் தேட வேண்டும் அந்தத் தேடல் இளவேனிலிடம் உள்ளது. தேடல் ரொம்ப முக்கியம்.

 கடந்த ஓராண்டில் நான் படம் செய்யவில்லை என்பதால் மனம் அமைதியற்று இருக்கிறேன். கேமரா பின்னால் சென்றால் தான் என் மனம் அமைதி அடைகிறது.அந்த அமைதியைத் தேடித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பேசும்போது,

'எனக்கு போட்டோகிராபி மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நான் சின்ன வயதில்  ஒன்பதாவது படிக்கும்போது வீட்டுக்குத் தெரியாமல் ஒரு கேமரா வாங்கி விட்டேன்.

அந்த வகையில் அந்தத் துறைக்குப் பக்கத்தில் நான் இருந்திருக்கிறேன். நான் ஓவியக் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பெரியார் திடலோடு தொடர்பிருந்தது.

பெரியார் படங்களில் கலர் போட்டோகிராபி சுபா சுந்தரம்  எடுத்ததுதான் இன்றும் பிரபலமாக  உள்ளன.அப்படி அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட போதெல்லாம் நானும் ஓர் உதவியாளராக அவருடன் இருந்திருக்கிறேன்.அப்படி பகல் வெளிச்சத்தில் அரை நாள் எடுக்கப்பட்ட படங்களை என்னால் மறக்க முடியாது. இன்று ஒற்றைப் புகைப்படத்திலிருந்து கதை சொல்லும் அளவிற்கு  புகைப்படக்கலை வளர்ந்திருக்கிறது.  ஒரு யானை, யானைப்பாகன் பின்னாடி ஆறு மாதம் செல்கிற புகைப்பட நண்பர்கள் எனக்கு உண்டு. பெரிய பெரிய ஆளுமைகள் அருகே நெருங்கிச் செல்லும் சாத்தியங்கள் புகைப்படக் கலைஞர்களுக்கு உண்டு.

எவ்வளவு கருவிகள் உபரணங்கள் வந்தாலும் அதன் பின்னே இருப்பது அதை இயக்கும் ஒரு கலைஞர் தான்.அதனால் எவ்வளவு தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதற்குப் பின்னால் உள்ள கலைஞர்களின் பங்களிப்பு முக்கியம்'' என்றார்.

எழுத்தாளர் பவா செல்லதுரை பேசும்போது,

"நான் என் வாழ்க்கையில் ஏராளமான எழுத்தாளர்களை, ஓவியர்களை, புகைப்படக் கலைஞர்களைக் கடந்து வந்திருக்கிறேன். எங்கள் ஊர் திருவண்ணாமலைக்கு இயக்குநர் பாலுமகேந்திரா வந்திருந்தார். அப்போது ஒரு ஸ்டுடியோ போட்டோகிராபர் அவரை நிற்கச் சொல்லி நடக்கச் சொல்லி நிமிரச்சொல்லி சிரிக்கச் சொல்லி படம் எடுத்துக் கொண்டிருந்தார். எடுத்து முடித்ததும் பாலுமகேந்திரா அவரை அழைத்தார். நீ ஸ்டுடியோ வச்சிருக்கியா? என்றார் .ஆமாம் என்றார். நீ கடைசிவரை ஸ்டுடியோவை தான் வச்சிருப்பே என்றார்.

 எங்கள் ஊரில் கனடாவிலிருந்து வந்திருந்த கிரீஷ் என்ற வெள்ளைக்கார போட்டோகிராபர் இருந்தான். அவனை நான் தேடிச்சென்ற போது வீட்டில் ஒரு மணி நேரமாகக் கதவைத் தட்டினேன் .தாமதமாகவே திறந்தான். ஏனென்று கேட்டால் வீட்டில் ஒரு நல்ல பாம்பை ஒரு மணி நேரமாகப் படம் எடுத்திருக்கிறான். அதுவும் 300 படங்கள்.அவன் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கனிமொழி மேடத்தைப் படம் எடுக்க மாட்டான் .ஏனென்றால் சாதுக்களை மட்டும் படம் எடுக்கவே அவன் இந்தியா வந்திருந்தான்.

 புகைப்படம் அழகியல் சார்ந்ததல்ல என்பதற்கு உதாரணமாகப் பல புகைப்படக்காரர்கள் இருக்கிறார்கள். இளவேனில்  சாதாரண புகைப்படக்காரர் கிடையாது. ஒருமுறை பிரபஞ்சனிடம் ஆட்டோகிராப்  கேட்டு ஒரு கல்லூரி மாணவி புத்தகத்தை நீட்டி இருக்கிறார். அப்போது தன்னிடமிருந்து பீர்பாட்டில்களை அந்த மாணவியிடமே கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இப்படித்தான் இருப்பார்கள் அவர்கள் .அப்படிப்பட்டவர்களின் அற்புத கணங்களையெல்லாம் இள வேனில் படமாக வெளியிட்டு இருக்கிறார் "

என்றவர், புகைப்படக் கலைஞரை மையமாக வைத்து வண்ணதாசன் எழுதிய  'போய்க் கொண்டிருப்பவள் ' கதையைக் கூறி அதில் வரும் விருத்தா கதாபாத்திரம் பற்றிக் கூறினார்.  அவர் மேலும் பேசும்போது, “பி.சி.ஸ்ரீராம் சார் ஒன்றரை மணி நேரம் சிறப்புரையாற்றினார் என்றால் எப்படி இருக்கும்? அவரிடம் அவரது கை கேமரா மூலம் பேச வேண்டும் .அவரது கேமரா பேசுவதைத் தான் நாம் கேட்க வேண்டும்.ஓவியர் மருது ஓவியங்களால் மட்டும் பேச வேண்டும். அதேபோல் இளவேனிலின் புகைப்படங்கள் மட்டும் பேச வேண்டும், அவர் எழுதக்கூடாது. இப்படி எழுதப்படுவதை வேறு யாரிடமாவது கொடுத்து அவர்  எழுத வைக்கலாம் ' என்றார்.

இயக்குநர் சசி பேசும்போது, "கிறிஸ் டோபர் நோலனிடம் ஒரு எடிட்டிங் முறை உள்ளது. அவர் விருப்பப்படி தான் அதைச் செய்வார். படம் பார்த்துவிட்டு வந்த பிறகு நாம்தான்  எடிட் செய்து கொள்ள வேண்டும் இதுதான் கதையா என்று. என் பேச்சின் முடிவிலும் நீங்கள் அது போல் எடிட் செய்து கொள்ளுங்கள். இளவேனிலின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது காமிக்ஸ் படிப்பது போல இருந்தது .அதே நேரம் அ.முத்துலிங்கத்தைப் படிப்பது போலவும் இருந்தது. சிறு வயதில் அப்போது படங்கள் நிறைய இருந்தால் தான் பிடிக்கும்.காமிக்ஸ் போலவே இந்தப் புத்தகம் நிறைய படங்களோடு இருந்தது.சுவாரஸ்யமாகவும் இருந்தது.இதில் எழுத்தாளர்களைப் பற்றி ஓவியர்களைப்பற்றியும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தன. படங்கள் நன்றாக இருந்தன எழுத்தும் நன்றாக இருந்தது.

 எனக்குச் சோர்வாக இருக்கும் போது  அ.முத்துலிங்கத்தை எடுத்துப்படிப்பேன். ஏனென்றால் அது உங்களை நோகடிக்காது.சுவாரஸ்யமான ஒரு விஷயம் இருக்கும்.  தகவல்களோடு இருக்கும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மாலையில், ஒரு மழைக்காலத்தில் ஒரு காப்பியோடு அ.முத்து லிங்கத்தைப் படித்தால் சிறப்பு. கூடவே ஆனியன் பக்கோடா இருந்தால் மேலும் சிறப்பு. அது மாதிரி இவரது எழுத்தில் வியக்க வைக்கக்கூடிய தகவல்கள் இருந்தன .

மருது சார் பற்றிய ஒரு கட்டுரையில் படித்தேன். நாற்காலி என்பது ஆங்கிலேயர் காலத்துக்குப் பிறகு வந்த ஒரு பொருள்.ஆனால் நாம் மந்திரி குமாரி காலத்திலிருந்து பாகுபலி காலம் வரை இருந்த அரசர்கள் நாற்காலியில் தான் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம் அப்படி என்றால் அது எல்லாம் பொய்.

மருது சார் பழைய அரசர்களைப் பற்றி வரையும்போது நாற்காலிகளை அரியாசனங்களை வரைவதில்லை.அவ்வளவு தகவல்களைத் தெரிந்து வைத்துக் கொண்ட பின்பு தான் ஓவியம் வருகிறார்.அப்படி என்றால் நாற்காலி பிற்காலத்தில் தான் வந்ததா? அரியாசனம் என்பதெல்லாம் பொய்யா?எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இந்த எழுத்தாளர்களுக்கு ஓவியர்களுக்கு ஒரு ரசிகன் அதிகமானாலும் எனக்கு அது போதும்  என்று எழுதி இருக்கிறார் இளவேனில்.இதற்கு மேல் என்ன சொல்ல? இதைவிட என்ன வேண்டும்?" என்றார்.

விழாவில்
விழாவில்

 இரண்டாம் படியைப் பெற்றுக் கொண்ட ஒளிப்பதிவாளர் வைடு ஆங்கிள் ரவிசங்கரன் பேசும்போது, தான் சுபமங்களா இதழுக்காகக் கலைஞரைப் புகைப்படம் எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கனிமொழியின் குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கையில் தான் புகைப்படம் எடுத்ததையும் கலைஞர் கையை அக்குழந்தை இறுகப் பற்றிக்கொண்டதை படம் எடுத்ததையும் அவர் விவரித்தார். அந்த படத்தை வெளியிட பல ஊடக நிறுவனங்கள் விரும்பியபோதும் அதை இன்று வரை கொடுக்காமல் ப்ரைவசி காப்பதையும் குறிப்பிட்டார். (அச்சமயம் கனிமொழி மேடையில் இல்லை. அவசரமான வேலையாக பத்து நிமிடம் வெளியே சென்றிருந்தார்! இருந்தால் இந்த உரைக்கு நெகிழ்ச்சியாக ஏதேனும் பதில் கூறியிருப்பார்!).

ஏற்புரை ஆற்றிய புதுவை இளவேனில், "இங்கே வந்து இருப்பவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள்தான்  . இங்கே உள்ள கூட்டம் அன்பால் மட்டுமே கூடிய கூட்டம் .இங்கு வந்திருக்கக் கூடிய விஐபிகள் விருந்தினர்கள்  அனைவருக்கும் நான் எதுவுமே செய்யவில்லை.நான் செய்தது அன்பு காட்டியது மட்டும்தான். அன்பார்ந்த கூட்டம் தான் இது.  என்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை அன்பைத் தவிர'' என்றார். டிஸ்கவரி புக் பேலஸ் மு. வேடியப்பன் நன்றியுரை ஆற்றினார்.

 முன்னதாக ஊடகவியலாளர் பி.என். எஸ் பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.

ஊடகவியலாளர் பவித்ரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com