டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

டி.வி.எஸ். குழுமத் தலைவரைப் பற்றி மு.க.ஸ்டாலின் சொன்ன கதை!

டிவிஎஸ் தொழில் குழுமத்தின் தூணாக இருந்த டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்திப் பேசினார்.  

அப்போது அவர், டி.வி.சுந்தரம், டி.எஸ்.சீனிவாசன் ஆகியோரின் முக்கிய பணிகள் பற்றிக் குறிப்பிட்டு பாராட்டினார்.

முதலமைச்சரின் உரையிலிருந்து...

“ தமிழ்நாட்டின் தொழில்துறை அடையாளங்களில் TVS முக்கியமானது என்பதை யாரும் மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.தமிழ்நாட்டினுடைய தொழில் முகத்தை காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு முகமாக – டி.வி.எஸ். நிறுவனத்தைக் காட்டலாம். இதற்கு அடித்தளம் அமைத்தவர் தொழில் மேதைகளில் ஒருவரான டி.வி.சுந்தரம்.

இன்றைக்கு லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் எத்தனை வந்தாலும் ஏழைகளுக்கான வாகனமாக இருந்தது டிவிஎஸ்-50 வாகனம் தான். ஏழை - எளிய சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஒளிவிளக்கு அந்த வாகனம். தென் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களுக்குள் முதலில் சென்ற வாகனம் டிவிஎஸ் தான். இதை உருவாக்கியவர் திருக்குறுங்குடி வெங்கராம் சுந்தரம் அவர்கள். டி.வி.சுந்தரம் குரூப்ஸ் நிறுவனங்களை உருவாக்கிய தொழில்துறை மேதை அவர். வழக்கறிஞராக இருந்து தொழிலதிபர் ஆனவர் அவர். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் என்பது மிகப்பெரிய அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் இடமாக இருந்தது. இப்போதும் இந்த அமைப்பு நூலகத்துடன் இயங்கி கொண்டு வருகிறது.

அந்த திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் உரையாற்ற வந்த வழக்கறிஞர் நார்டன் அவர்களது உரையைக் கேட்டு தொழில் துறையில் இறங்கினார் டி.வி.சுந்தரம் அவர்கள். 1912-ஆம் ஆண்டு மதுரையை மையமாக கொண்டு பேருந்து சேவையை தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை தான் அவர் முதன்முதலாக பேருந்து இயக்கிய வழித்தடம். அந்தக் காலத்தில் சரியான சாலை வசதிகள் இல்லை. அதனால் சாலைகள் போடுகிற ஒப்பந்தத்தையும் எடுத்தார். சாலைகளில் இரும்பு ஆணிகள், மாட்டு லாடம் அதிகம் கிடக்கும். இதனால் பேருந்து டயர் பஞ்சர் ஆகும். எனவே இதை முன்கூட்டியே எடுக்க காந்த வாகனத்தையும் வைத்திருந்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வந்தது. உடனே கரிவாயு மூலம் வாகனத்தை இயக்குகிற பங்க் வைத்தார். பேருந்து இயக்குவது - பாகங்களை தயாரிப்பது - வாகனங்களை உருவாக்குவது போன்ற கிளைத் தொழில்கள் எல்லாவற்றையும் தொடங்கியதால்தான், இன்றைக்கு 80 நாடுகளில் டி.வி.எஸ் நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டி.வி.எஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என்று சொல்வதால் ஏதோ அரசியல் பேசுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து வெற்றிக்கொடி நாட்டலாம் என்றுதான் சொன்னேன்.

ஒரு இயந்திரத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கான கையேட்டை டி.எஸ்.சீனிவாசன் தயாரித்தாகவும் – அதை ஒருவர் படித்தாலே சிறந்த தொழிலதிபர் ஆகிடலாம் என்றும் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் - எல்லோரும் தங்களுக்குத் தெரிந்த தொழில் ரகசியத்தை வெளியில் சொல்லி விடமாட்டார்கள். ஆனால், எல்லோருக்கும் கற்பிக்கக் கூடியவராக அவர் இருந்திருக்கார்.

சேவைத் துறை நிறுவனமாக இருந்த டி.வி.எஸ். நிறுவனத்தை உற்பத்தித் துறை நிறுவனமாக மாற்றியதில் பெரும்பங்கு டி.எஸ்.சீனிவாசன் அவர்களை சேரும். சென்னை பாடி பகுதியில், 300 ஏக்கர் நிலத்தை வாங்கியபோது, இவ்வளவு பெரிய நிலம் எதற்கு என்று அப்போது சிலர் தடுத்திருக்கிறார்கள். ஆனால், 25 ஆண்டுகள் கழித்து தேவைப்படும் என்று தொலைநோக்குப் பார்வையோடு சொல்லி இருக்கிறார் டி.எஸ்.சீனிவாசன்.

சைக்கிள் போல ஒவ்வொரு வீட்டிலும் மொபெட் இருக்க வேண்டும் என்று சொல்லி – அதை சாதித்துக் காட்டியவர் அவர்தான். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயும் ஓசூர் தொழிற்சாலையை உருவாக்க கடுமையாக உழைத்தார். துணிச்சலாக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்.

தொழிலாளர்களோடு தொழிலாளராக இருந்திருக்கார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்திருக்கார். இந்த சிந்தனை என்பது மரியாதைக்குரிய டி.வி.சுந்தரம் அவர்கள் மூலமாக வந்த சிந்தனை. காந்தியவாதியாக வாழ்ந்தவர் டி.வி.சுந்தரம் அவர்கள். முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார். இளம் வயதில் கணவரை இழந்த தன்னுடைய மகளுக்கு அந்தக் காலத்திலேயே மறுமணம் செய்து வைத்தார். தலைசிறந்த மருத்துவராக - சட்டமன்ற உறுப்பினராக - பிரதமர் நேரு அவர்களின் அமைச்சரவையில் ஒன்றிய துணை அமைச்சராவும் - தி.சு.சௌந்திரம் உயர்ந்தார்.

இப்போதும் சிலர் குழந்தை திருமணத்தை பச்சையாக ஆதரித்தும் - மறுமணம் செய்வதாக இருந்தால் அதற்கு மந்திரம் கிடையாது என்றும் சொல்கிற காலத்திலே - 60 ஆண்டுகளுக்கு முன்னரே முற்போக்காக சிந்தித்தவர் டி.வி.சுந்தரம்.

இங்கே ஒரு புத்தகம் டி.வி.எஸ் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டி.வி.எஸ் செய்த சாதனைகளில் இதுவரை வெளியில் தெரியாத ஒரு சாதனை இது. தொழில் உற்பத்தி மற்றும் பெருக்கத்தின் வழி, வருமானத்தையும் வளர்ச்சியையும் மட்டும் பெருக்காமல், ஒரு படி மேல போய், பல்லுயிரின் இருப்புக்கும் பெருக்கத்துக்குமே தொழில்துறை பயன்பட முடியும் என்று டிவிஎஸ் நிறுவனம் காட்டியிருக்கிறது. அதுதான் இந்த புத்தகம்.

எஸ்எஸ்டி அறக்கட்டளை மூலமாக 2500-க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து அந்தக் கிராமங்களை மேம்படுத்தி கொண்டு வருகிறார் வேணு சீனிவாசன் அவர்கள்.

*பெண்கள் - குழந்தைகள் வளர்ச்சி

*நீர் பாதுகாப்பு

*வேளாண்மை

*கால்நடை வளர்ச்சி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளை நீங்கள் செய்து கொண்டு வருகிறீர்கள்.

இதே போன்ற அறக்கட்டளைகளை நிறுவி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கிராமப்புற மேம்பாட்டுக்கு பங்களிக்க வேண்டும்.

'நம்ம ஊர் பள்ளி' என்கிற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். சமூக சேவை எண்ணம் கொண்டவர்களுடைய முயற்சியையும் இணைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நம்முடைய வேணு சீனிவாசன் அவர்களும், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாத் ஆனந்த் அவர்களும் இந்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். திட்டத்தை நான் தொடங்கிய முதல் நாளே ஐம்பது கோடி ரூபாய் மதிப்பிலும், இப்போது 158 கோடி ரூபாய் மதிப்பிலும் கொடைகள் வந்திருக்கிறது.

2024 ஜனவரி மாதம் நாங்கள் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இப்படி எங்கேயும் நடந்ததில்லை என்று புகழப்படுகிற அளவிற்கு நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். டி.வி.எஸ். போன்ற நிறுவனங்கள் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். தொழில் துறையைப் பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும். டி.வி.எஸ் போன்ற புதிய புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com