விமானத்தில் இணைய வசதி
விமானத்தில் இணைய வசதி

விமானத்திலும் நெட் - இந்தியா விரைவில் முன்னிலை!

தரையில் இருக்கும்போது மட்டுமல்ல, வானில் பறக்கும்போதும் இணையத்தில் மூழ்கிக் கிடப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பார்கள் என்று கணிப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்துக்குள் இணைய வசதி என்பது அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கும்நிலையில், வானில் பறக்கையில் இணையத்தைப் பயன்படுத்தும் பழக்கம் இந்தியர்கள் உட்பட்ட ஆசிய- பசிபிக் பகுதியினரில் அதிக அளவில் இருக்கிறது. இந்த வசதியை அமைத்துத் தரும் அமெரிக்காவின் வயாசாட் நிறுவனத்தின் தலைவர் குரு கௌரப்பன், அண்மைக்காலமாக இந்திய விமான நிறுவனங்களில் இணையவசதியை ஏற்படுத்துவது சட்டென அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

சுமார் 650 விமானங்களில் இணைய வசதி இருக்கும் நிலையில், 1,100 விமானங்களில் புதிதாக இணைய வசதியை அமைத்துத் தர, போயிங், ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

வயாசாட் நிறுவனம் இதற்காக பிரிட்டனின் இன்மார்சாட் செயற்கைக்கோள் நிறுவனத்தை 730 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு கடைசிவாக்கில் இந்திய விமான நிறுவனங்கள் தங்களின் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கும் என்று கௌரப்பன் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இணையப் பயன்பாடு வட அமெரிக்காவில் 75சதவீதமாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் 49சதவீதமாகவும் ஐரோப்பாவில் 35 சதவீதமாகவும் உள்ளது. வான் பயணத்தில் பொழுதுபோக்கு வசதியின் அடிப்படையில் விமானங்களைப் பயணிகள் தேர்ந்தெடுப்பது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, விமான இணைய வசதியானது 2032ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் வட்டார நாடுகளில் 5,300 ஆகவும், வட அமெரிக்காவில் 4,700 ஆகவும், ஐரோப்பாவில் 3,300ஆகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதெல்லாம் இருக்கட்டும், விமான இணையக் கட்டணம் இலவசமாகக் கிடைக்குமா அல்லது கட்டணத்திலா எனக் கேட்பது புரிகிறது.

அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை என்கிறார், கௌரப்பன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com