ஸ்டார்ட்-அப்புகளுக்குச் சாதகமான நகரம்- 18ஆம் இடத்தில் சென்னை!

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு
ஸ்டார்ட் அப் தமிழ்நாடு
Published on

ஆசிய பிராந்தியத்தில் ஸ்டார்ட்அப்களுக்கான சாதகமான சூழமைவு உள்ள நகரங்களில் 18-வது இடத்துக்கு சென்னை முன்னேறியுள்ளது. 

சர்வதேச அளவில் ஸ்டார்ட்அப்களுக்கான சூழமைவு குறித்து ஸ்டார்ட்அப் ஜெனோம் (Startup Genome)  மற்றும் உலக தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு (Global Startup Ecosystem Report) அமைப்பின் அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து 11-வது ஆண்டாக 2023-ம் ஆண்டுக்கான அறிக்கை ஜூன் 10ம் தேதி லண்டனில் வெளியிடப்பட்டது. 50 நாடுகளில் 290 ஸ்டார்ட்அப் சூழமைவு இடங்கள் குறித்தும் 35 லட்சம் ஸ்டார்ட்அப்கள் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புத்தாக்க சூழமைவு மேம்பாட்டு நிறுவனமாக ஸ்டார்ட்அப் ஜெனோம் திகழ்கிறது. இந்நிறுவனம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படவும், அதன் வளர்ச்சிக்கேற்ற சூழமைவு உருவாக்கத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது.

வளர்ந்துவரும் சூழமைவு கொண்ட நகரங்கள் வரிசையில் சென்னை 21 முதல் 30 இடங்களுக்குள் உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது

ஜூலை 1, 2021 முதல் டிசம்பர் 31, 2023 வரையான காலத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சூழமைவு மூலம் 27.4 பில்லியன் டாலரை (சுமார் ரூ.2,27,420 கோடி) உருவாக்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூழமைவு மதிப்பு என்பது பொருளாதார தாக்கம் மற்றும் வெளியேறிய ஸ்டார்ட்அப்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும்.

குறைந்த ஊதியத்தில் திறன் மிகு பணியாளர்கள் கிடைப்பதற்கான சூழமைவு அளவீட்டில் சர்வதேச அளவில் 25 இடங்களுக்குள் ஒன்றாகவும், ஆசிய அளவில் 10 இடங்களுக்குள் ஒன்றாகவும் சென்னை திகழ்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழமைவு அடிப்படையில் ஸ்டார்ட்அப்களின் செயல்பாடு, வெளியேறிய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களின் மதிப்பு மற்றும் நிதி திரட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

நிதி பெறுவதற்கான சூழமைவில் ஆசிய அளவில் 20 இடங்களுக்குள் சென்னை இடம்பிடித்துள்ளது. தொடக்க நிலை ஸ்டார்ட்அப்களுக்கான நிதி திரட்டல் மற்றும் முதலீட்டாளர் செயல்பாடு அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

திறன் மிகு பணியாளர் சூழமைவு பிரிவில் சென்னை ஆசிய அளவில் 25 இடங்களுக்குள் உள்ளது. அத்துடன் திறன்மிகு பணியாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான சூழமைவு இங்கு நிலவுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் டிஎன் நிறுவனத்தின் பிரதான இலக்கு உலக அளவில் ஸ்டார்ட் அப் சூழமைவு உள்ள இடங்களின் வரிசையில் 20-க்குள் தமிழ்நாட்டை இடம்பெறச் செய்வதாகும்.

சென்னையில் இதற்குரிய சூழமைவு மிக வேகமாக உருவாகி வருகிறது. தமிழ்நாட்டில் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இதற்கான சூழமைவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம்  தலைநகரில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் வளர்ச்சிபெறுவதற்கான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

பிராந்திய அளவில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், கடலூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலும் மையங்கள் உருவாக்கப்பட்டு வளர்ச்சி பரவலாக்கப்பட்டுள்ளன.  இது தவிர சிறிய அளவிலான அலுவலகங்கள் கோவை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வருகின்றன.

நிதி ஆயோக் அமைப்பின் கீழ் செயல்படும் அடல் இனோவேஷன் மிஷன் (ஏஐஎம்) 2023-ம் ஆண்டில் ஸ்டார்ட்அப்களுக்கான சூழமைவு, திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com