51% விற்பனை சரிந்த ஓலா ஸ்கூட்டர்... என்ன ஆச்சு?!

ஓலா
ஓலா
Published on

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் முன்னிலை நிறுவனமான ஓலா மின்சார ஸ்கூட்டரின் விற்பனை மளமளவெனச் சரிவைக் கண்டுவருகிறது. இந்நிலையில், அந்த விற்பனை மையங்களில் வீடுகளுக்கான இன்வர்ட்டர் விற்பதில் மும்முரமாக இறங்கியுள்ளது.

ஓராண்டு கணக்கில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஓலா ஸ்கூட்டரின் விற்பனை தொடர் சரிவைச் சந்தித்துள்ளது.

பிரபல வர்த்தக ஊடகமான மிண்ட்டின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் நவம்பர்வரையிலான காலத்தில் மாநிலவாரியான வாகனப் பதிவுகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஓலா எலக்டிரிக் நிறுவனம் வருடாந்திர வளர்ச்சியைக் காணத் தவறிவிட்டது தெரிகிறது. இந்தியாவின் நான்கு மிகப் பெரிய மின்சார ஸ்கூட்டர் சந்தைகளான மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவற்றில் கடந்த பிப்ரவரியிலிருந்து இதே நிலை தொடர்ந்துவருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாநிலத்திலோ அல்லது ஒரு யூனியன் பிரதேசத்திலோ முற்றிலும் எந்த விற்பனையும் நடக்கவில்லை என்பது மோசமான நிலையாகும்.

அண்மையாக, ஓலாவின் இடம் ஐந்தாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஓலா சில்லறை விற்பனையில் கவனம் செலுத்தியதும் முக்கியமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 800 சில்லறை விற்பனைக் கடைகளாக இருந்ததை நான்கு மடங்கு கூடுதலாக்கி 4 ஆயிரம் கடைகளாக அதிகரித்ததையும் குறிப்பிடுகிறார்கள், சந்தை வல்லுநர்கள்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களில் மின்சார ஸ்கூட்டரே விற்பனை ஆகவில்லை. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் அங்கு 500 யூனிட் விற்றிருந்தது. கோவாவில் கடந்த செப்டம்பரில் 96 சதவீதம் அளவுக்குக் குறைந்து 23ஆகவும், பின்னர் 22ஆகவும், கடந்த மாதத்தில் சுத்தமாக விற்பனையே ஆகாமலும் உள்ளதை அரசாங்கத்தின் வேகன் தளம் புள்ளிவிவரம் காட்டுகிறது. கடந்த ஆண்டில் செப்டம்பர்- நவம்பர் காலத்தில் 784 ஸ்கூட்டர்கள் கோவாவில் விற்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் மிகப் பெரிய மின்சார ஸ்கூட்டர் சந்தையான மகாராஷ்டிரத்தில் கடந்த மாதத்தில் 83 சதவீதம் ஓராண்டு சரிவைச் சந்தித்துள்ளது. இதுவே அக்டோபரில் 77 சதவீதம் ஓராண்டுச் சரிவைக் கண்டது.

சொந்த மாநிலமான கர்நாடகத்தில் நவம்பர் ஓராண்டுச் சரிவாக 84 சதவீதத்தில் 520 வண்டிகளே விற்பனை ஆகின. இதுவே முன்னைய அக்டோபர் மாதத்தில் 1,303 ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் கடந்த 11 மாதங்களில் ஓலா எலக்டிரிக்கின் விற்பனை 51சதவீதம் குறைந்து, ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 288 அளவுக்கு வர்த்தகம் ஆகியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 3,93,894 ஆக இருந்தது.

இந்த மாதத்தில் 25ஆம் தேதிவரை கடந்த பதினொரு மாத நிலவரம்தான் தொடர்கிறது. கடந்த ஆண்டில் 4,07,701 ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகின. இதுவரை 1,97,398 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஓலா நிறுவனமானது நிலைமையைச் சமாளிக்க தன்னுடைய சில்லறை விற்பனை வலையத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஓலா சக்தி எனும் பெயரில் வீட்டு மின்சாரப் பொருட்கள் விற்பனையில் மும்முரம் காட்டிவருகிறது. சுமார் 50 ஆயிரம் முதல் 2 இலட்சம் ரூபாய்வரையிலான வீட்டு இன்வர்ட்டர்களை விற்பனைசெய்யும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் வரும் ஜனவரி- மார்ச் காலாண்டு காலப்பகுதியில் சுமார் 100 கோடி ரூயாபையைத் திரட்ட அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com