என்னது தமிழ்நாட்டில் மட்டும் பத்தாயிரம் கோடியா? ஆச்சரியப்பட வைக்கும் பிரியாணி வியாபாரம்!

பிரியாணி
பிரியாணி
Published on

‘டங்… டங்… டங்’ என பிரியாணி அண்டாவைத் தட்டும் சத்தம் தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் கேட்கலாம். அந்தளவுக்கு தமிழரின் வாழ்வில் பிரியாணி ஒன்று கலந்துவிட்டது.

கூட்டு சேர்ந்தாலும் கொண்டாட்டம் என்றால் அது பிரியாணியோடுதான். இன்றைய தலைமுறையின் முதல் விருப்ப உணவாக மாறியிருக்கும் பிரியாணியின் சந்தை மதிப்பு எவ்வளவு தெரியும்...?

தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதில் சென்னைதான் மிகப்பெரிய வணிக சந்தையாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாணி கடைகளின் மூலம் ரூ.2,500 கோடிக்கு வணிகம் நடப்பதாகவும், பதிவு செய்யப்படாத சிறு கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் ரூ.7500 கோடி அளவுக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிரியாணி வணிகத்தில் 50 சதவீதம் அளவுக்கு சென்னையிலிருந்து மட்டுமே வணிகமாகிறதாம்.

முன்பெல்லாம் பகலில் மட்டும் விற்பனையாகி வந்த பிரியாணி, தற்போது இரவு பகல் என 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது. இரவில் சுடச் சுட பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பலரும் அதுபோன்ற கடைகளைத் தேடிச் சென்று சாப்பிடுகிறார்கள்.

பிரியாணி என்றால் முன்பெல்லாம் புஹாரி, அஞ்சப்பர், ஆம்பூர், பொன்னுசாமி என்றிருந்தது. பிறகு திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஜூனியர் குப்பண்ணா, எஸ்எஸ் ஹைதராபாத், காதர் பாய் பிரியாணி என வகை வகையான கடைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டன. இந்த பெயர்களில் சில சின்ன சின்ன மாற்றங்களை செய்து சிறு சிறு கடைகளும் முளைத்தன. ருசியும் தரமும் கொண்ட பிரியாணி எங்கு, எந்த நேரத்தில் கிடைத்தாலும் தேடி சென்று சுவைக்கும் பிரியாணி சுவையர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

பாஸ்மதி அரிசி பிரியாணி கொங்கு பகுதியிலும் சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் பிரியாணி ஆம்பூர், வாலாஜா, செட்டிநாடு பகுதியில் பிரபலம்.

சாலையோர கடைகளில் குறைந்தது ரூ. 100க்கு விற்பனை செய்யப்படும் பிரியாணி, நட்சத்திர உணவகங்களில் அதிகபட்சமாக ரூ. 1600 வரை விற்கப்படுகிறது. சிக்கன், மட்டன் விலை ஏற்றத்துக்கு மாதிரி பிரியாணி விலையும் மாறும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் பிரியாணி வியாபாரம் கொடிகட்டித்தான் பறக்கிறது. ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முகலாயர்கள் மூலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரியாணி மக்களின் கொண்டாட்ட உணவாக மாறியிருக்கிறது.

இன்னைக்கு ஒரு புடி பிடிக்க வேண்டியதுதான்...!

logo
Andhimazhai
www.andhimazhai.com