
தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு எச்சரித்துள்ளது.
அண்மையில், தங்க நகைகளின் தயாரிப்பின்போது, ரீனியம், இரிடியம் போன்ற வேதிப்பொருட்களை தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாகவும், அவை தூய்மையைச் சரிபார்க்கும் இயந்திரத்தில் கண்டுபிடிக்க முடிவதில்லை எனச் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.
மறுபக்கம், ஏராளமான அறிவியல் காரணங்களை முன்னிறுத்தி, தங்கத்தில் கலப்படம் செய்வது சாத்தியமில்லை என்று தங்க நகை செய்பவர்களும், நிபுணர்களும் கூறிவந்தனர்.
இந்நிலையில், தங்கத்தில் ஏதேனும் கலப்படம் இருப்பதைக் கண்டறிந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.
தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாக வெளியான தகவல் இந்திய தர நிர்ணய அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், கூறப்படும் கலப்படங்களைச் செய்வதற்கான வேதிப்பொருட்களை தயாரிப்பவர்கள், விநியோகிப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் மீது கவனமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு உறுதியளித்துள்ளதாக அகில இந்திய ரத்தினம், நகைகளின் உள்நாட்டு கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்தே கூறியுள்ளார்.
மேலும், ரீனியம் கலப்படம் தொடர்பாக முறையற்ற தகவல்கள் மட்டுமே பரவிவருவதாகவும், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இதுகுறித்த முறையான புகார் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று ராஜேஷ் ரோக்தே தெரிவித்துள்ளார்.