யூனியன் வங்கி
யூனியன் வங்கி

ஒரு புத்தகம், ஒரு வங்கி: உருளும் இரு மகா சீனியர் தலைகள்!

Published on

ஏம்பா ஒரு புத்தகம் வாங்கினதுக்கு இவ்வளவு அக்கப்போரா?  என்று இதைப் படித்தால் கேட்க மாட்டீர்கள். ஏனெனில் வாங்கப் பட்ட பிரதிகள் எண்ணிக்கை அப்படி... சுமார் இரண்டு  லட்சம் பிரதிகள்!

சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம் எப்) இந்திய செயலாக்க இயக்குநராக இருந்து சமீபத்தில் பதவிக்காலம் முடியும் முன்பே பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். இவர் நமது நாட்டின் முன்னாள் தலைமை நிதி ஆலோசகரும் கூட. இவர் 'India@100: Envisioning Tomorrow's Economic Powerhouse’  என்றொரு நூலை எழுதி இருக்கிறார். இதை ரூபா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் என்ன பஞ்சாயத்து?

இந்த புத்தகத்தின் 1,89,450 பேப்பர் பேக் பிரதிகள், 10,422 கெட்டிஅட்டை பிரதிகள்- ஆகியவற்றை பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சுமார் 7,25 கோடி ரூபாய் செலவில் வாங்கி இருக்கிறது. அவற்றை தன் வாடிக்கையாளர்கள், பெருநிறுவனங்கள், கல்லூரிகள், நூலகங்கள் ஆகியவற்றுக்குக் கொடுப்பதாகத் திட்டமாம்.  நூலின் விலை  பேப்பர் பேக் ரூ ரூ 350, கெட்டி அட்டை ரூ 597.

இதில் 50% முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 1 அன்று இந்த நூல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் பொருளாதார மதிப்பு 55 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக 2047-இல் எப்படி மாறும் என்பதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்டது இந்த நூல். இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் என்கிற முறையில் இதை எழுதத்தகுதியான நபரும் கூட.

2018 முதல் 2021 வரை தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அவர், பிறகு ஐ எம் எப்க்கு செயலாக்க இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

என்ன பஞ்சாயத்து என்றால் பொதுத்துறை வங்கி ஒன்று இவ்வளவு அதிகமான பிரதிகளை வாங்கியதில் தவறுகள் நடந்திருக்கலாம் என்பதுதான்.

இதைத்தொடர்ந்து யூனியன் பேங்க ஆப் இந்தியாவின் எம்டியாகவும் தலைமை செயல் இயக்குநராகவும் இருக்கும் மணிமேகலை என்பவருக்கு பதவியில் தொடர வாய்ப்பு மறுக்கப்படலாம் என எகனாமிக் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாங்குவதற்கு வங்கியின் போர்டு அனுமதி பெறப்படவில்லை என்றும் அதைத் தொடர்ந்து இந்த நூல் வாங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்ததாகவும் அது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்நாளேடு கூறுகிறது. ஜூன் 30-உடன் மணிமேகலையின் பதவிக்காலம் முடிவடைகிறது!

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஐஎம்எப் இல் இருந்து இந்திய அரசால் விலக வைக்கப்பட்டதற்கும் கூட இந்த புத்தக விற்பனை ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இந்த தகவல்கள் எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் விவரமாக வெளியாகி பரபரப்பைக் கிளப்பி உள்ளன.

இப்ப சொல்லுங்க வாள்முனையை விட பேனா முனை வலிமையானதுதானே?

logo
Andhimazhai
www.andhimazhai.com