டாட்டா மோட்டார் நிறுவனத்தின் சார்பில் 9ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 5ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் கார் ஆலை, இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் டாட்டா தரப்புக்கும் இடையே கடந்த மார்ச்சில் கையெழுத்தானது.
அதைத்தொடர்ந்து, இன்று பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கார் ஆலை கட்டுமானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, தொழில்துறை அமைச்சர் ராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.
டாட்டா நிறுவனத் தலைவர் சந்திரசேகரனும் இதில் கலந்துகொண்டார்.
இந்த ஆலையில் டாட்டா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய சொகுசு கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பல முறை சந்திரசேகரனையும் டாட்டா நிறுவனத்தையும் பாராட்டியதுடன் தமிழகத்துக்கு மேலும் முதலீடு செய்யவும் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சரால் முதல் முறையாகத் தொடங்கப்பட்டது இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.