’செல்வம் பிராய்லர்ஸ்’ நிறுவனர் மருத்துவர் செல்வராஜ் மறைவு!

மருத்துவர் பி செல்வராஜ்
மருத்துவர் பி செல்வராஜ்
Published on

நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல கோழிப்பண்ணை நிறுவனமான செல்வம் பிராய்லர்ஸின் நிறுவனர் மருத்துவர் பி.செல்வராஜ் காலமானார். அவருக்கு வயது 84.

சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரில் இளநிலைப் பட்டம் பெற்ற செல்வராஜ், கோழிப்பண்ணைத் தொழிலின் ஆரம்பக்கட்ட முன்னோடிகளில் முக்கியமானவர். நாமக்கல் பகுதியில் கோழித் தொழில் சிறப்பாக வளர்ச்சி பெற இவரது பங்களிப்பு முக்கியமானது.

1971-இல் தன் முப்பதாவது வயதில் பாதுகாப்பான அரசுப் பணியைத் துறந்து கோழித் தொழிலுக்குள் செல்வராஜ் நுழைந்தபோது அவரை எல்லோரும் வியந்து பார்த்தனர். முட்டைக் கோழிப்பண்ணையை முதல் முதலாகத் தொடங்கிய இவர், ஆரம்பத்தில் இழப்புகளைச் சந்தித்தாலும் பின்னர் வெற்றிகளைக் குவித்தார். அதைத் தொடர்ந்து பிற பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் தீவனம், மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றை வழங்கும் செல்வம் ட்ரேடிங் கம்பெனி தொடங்கினார். தாய்க்கோழிகள், குஞ்சுகள் என பண்ணைத் தொழிலை விரிவுபடுத்தினார். 1987-இல் செல்வம் பிராய்லர்ஸ் பிரைவேட்  லிமிடட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதை வளர்த்தெடுத்தார். நாமக்கல்லிலும் ஹோசூரிலும் சொந்த தீவன ஆலைகள், குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்கினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கோழித்தொழிலில் தம் நிறுவனத்தை வளர்த்தெடுத்தவர், சுமார் 300 கோடிக்கும் மேல் வணிகம் செய்யும் நிலைக்கும் உயர்ந்தார்.

நாமக்கலில் கால்நடை மருத்துவக்கல்லூரி தொடங்க நிதி திரட்டும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். 1985-ல் இவர் பத்து லட்சரூபாய் நிதியை நன்கொடையாக இந்த கல்லூரி தொடங்க வழங்கியது குறிப்பிடத்தக்கது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக மண்டலத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை சிறப்பாக வகித்துவந்தார்.

மருத்துவர் செல்வராஜைப் பொறுத்தவரை உறுதியான முடிவுகளை எடுத்து மாறாமல் நிற்பவர். நேரந்தவறாமை அவரது பெருங்குணங்களில் முக்கியமானது. தம் நிறுவன ஊழியர்களை பல்துறைகளிலும் பயிற்சி எடுத்து வளர்த்தெடுப்பார். அவர்கள் மேற்படிப்பு படிக்க ஊக்குவிப்பவர் என்று நினைவுகூர்கிறார்கள். இவரது நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பலர், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். பலர் வெற்றிகரமான தொழில் அதிபர்களாகவும் உள்ளனர்.

அவர் 2000வது ஆண்டை ஒட்டி ஒரு கல்வியாளராகவும் உருவெடுத்தார். கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி போன்றவற்றையும் ஒரே குடையில் உருவாக்கினார். தற்போது 6000 மாணவர்கள் இக்கல்லூரிகளில் படித்துவருகிறார்கள். இந்நிறுவனங்களில் கேபிடேஷன் கட்டணம் வாங்கப் படாது என்பது முக்கியமான விஷயம். கொரானா சமயத்தில் மாணவர்களிடம் உணவுக் கட்டணம் வாங்காமல் சலுகை அளித்திருந்தார்.

மருத்துவர் செல்வராஜுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உண்டு. மகன் மருத்துவர் பாபு, செல்வம் பிராய்லர்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார். கல்வி நிலையங்களை மருமகள் கவித்ரா நந்தினி பாபு கவனித்துக் கொள்கிறார்.

நாமக்கல் நகரை முட்டை நகரமாக வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய செல்வராஜின் மறைவுக்கு சக பண்ணையாளர்கள், அரசியல்தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com