
உலகளாவிய விற்பனை சரிவால், தங்கம், வெள்ளியின் விலைகள் நேற்று 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்து காணப்பட்டது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய நிலவரப்படி, 999 -தூய்மையான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 2.16% குறைந்து, ரூ. 1,30,930.7ஆகவும், வெள்ளியின் விலை ஒரு கிலோகிராமுக்கு 2.89% சரிந்து 1,64,302.10ஆகவும் உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தங்கத்தின் விலை 1.90%, வெள்ளியின் விலை 28.33% குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலையின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
1) பொதுவாக அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்கள் உலகின் மிகவும் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படும். இந்நிலையில், இதற்கான வட்டி விகிதம் அதிகரித்ததால், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் உள்ள தங்கள் பணத்தை எடுத்து, அதிக வருமானம் தரும் அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், தங்கம், வெள்ளிகளை பரிவர்த்தனை செய்வதற்கான வர்த்தக நிதிகள் முறையே 2%, 3% சரிந்துள்ளன.
2) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி, மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கிறார்கள். இதுபோன்ற இறுக்கமான பணவியல் கொள்கையினால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும். சர்வதேச சந்தையில் தங்கம் டாலரில் வர்த்தகம் செய்யப்படுவதால், டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படும். இதுபோன்ற இறுக்கமான பணவியல் கொள்கை ஏற்படலாம் என்று எதிர்பார்த்த காரணத்தினால், மற்ற நாட்டு முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்கத் தொடங்கினர்.
இதன் காரணமாக, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 3,016 குறைந்து ரூ. 1.31 லட்சமாகக் குறைந்து காணப்பட்டது.
3) தங்கம், வெள்ளி ஆகிய வருவாய் ஈட்டாத சொத்துக்களை வைத்திருப்பதால், வங்கிக் கணக்குகளைப் போலவோ அல்லது பத்திரங்களைப் போலவோ மாதாந்திர வட்டியோ அல்லது பங்கு ஆதாயமோ கிடைக்காது.
இதனால், வட்டி விகிதங்கள் உயர்ந்து காணப்படும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி தராத தங்கத்தில் முதலீடு செய்வதைவிட, வட்டி விகிதங்கள் அதிகமாக தரும் பத்திரங்களில் முதலீட்டாளர்கள் பணத்தைப் போடத் தொடங்கியதால் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து காணப்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த அக்டோபர் 27, 28 தேதிகளில் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அமைப்பின் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் முக்கியக் குழுவின் கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட குறிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.
இந்தக் கூட்டத்தில், வட்டி விகித உயர்வு குறித்து அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகளின் கருத்துகள் என்ன என்பதை முதலீட்டாளர்கள் அறிய காத்திருக்கின்றனர். வரும் டிசம்பரில் மீண்டும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் மேலும் தங்கம் விலை வீழ்ச்சி அடையலாம் எனக் கருதப்படுகிறது.
முதலீட்டு ஆலோசகர் மகுடேசுவரன் இதுபற்றி அந்திமழையிடம் கூறுகையில்
”கடந்த ஆண்டு அக்டோபரில் தங்கம் இருந்த தாழ்விலை ஓர் அவுன்சுக்கு சுமார் 3800 டாலர்கள் என்ற நிலையில் இருந்தது. இப்போது அந்த விலையில் தங்கம் (சுமார் 3700 டாலர்கள்) உள்ளது. அதே போல் கடந்த ஆண்டு ரூபாய் மதிப்பில் பார்த்தால் இதே தங்கம் கிராம் ஒன்றுக்கு 13037 ரூபாய் வரை தாழ் விலைக்குச் சென்றது. அதன் பின்னர் உயர்ந்துகொண்டிருந்தது. தற்போது மீண்டு கடந்த ஆண்டு அக்டோபர் விலைக்கே தாழ்ந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. தங்கம் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் இப்போதைய தாழ் விலையில் வாங்கத் தொடங்கலாம். இனி வீழ்ச்சி என்பது இருக்காது. இருந்தாலும் சுமார் 10% அளவுக்கு மட்டுமே இருக்கும். இதே விலைதான் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றே நினைக்கிறேன். விலை குறைந்ததால் தங்கம் அதிகமாக நுகரும் நம் போன்ற ஆசிய நாடுகளில் அதிகம் வாங்கத் தொடங்குவதால் விலை வீழ்ச்சி இதற்கு மேல் இருக்காது என்றே கருதப்படுகிறது” என தெரிவிக்கிறார்.
விலை வீழும்போது வாங்குவதுதானே முதலீட்டாளர்களுக்கான பாலபாடம்?