அரிசி வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்
அரிசி வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்

அரிசி ஏற்றுமதி தடை: அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்கள்!

பாஸ்மதி அல்லாத அரிசிகள் ஏற்றுமதிக்கு கடந்த வியாழன் அன்று தடைவிதித்தது மத்திய அரசு. இந்த தடையால், உலக நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, ஆசிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசியின் விலையும் உலக சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியானது 25 சதவீதம் ஆகும். கடந்த சில மாதங்களாகவே உலக அளவில் இந்திய அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்திய மக்களும் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு 11 சதவீத அளவுக்கு கூடுதல் விலை கொடுத்து அரிசியை வாங்குவதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையால் அமெரிக்காவின் பல்வேறு சூப்பர் மார்கெட்களில் அரிசி வாங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த தெலுங்கு சமூகத்தினர் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சமூக மக்களே ‘சோனா மசூரி’ என்ற வெள்ளை அரிசியை அதிகம் நம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சூப்பர் மார்கெட்கள் அரிசியின் விலையை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் இந்த தற்காலிக தடையால் அமெரிக்கா, கனடா சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் என்றாலும், ஏற்கெனவே பணவீக்கத்தாலும், உணவு பொருட்களின் தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகள், துருக்கி, சீரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளே அதிக அளவில் பாதிக்கப்படும் என்கின்றனர்.

வட இந்தியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி உற்பத்தியையும் பாதித்துள்ளதாகக்  கூறுகின்றனர். காய்கறிகளின் விலையைப் போன்று அரிசி விலையும் உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதாக கூறுப்படுகிறது.

அத்திவாசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும், சில மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலிலும் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பதால், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com