சன் பீஸ்ட் மேரி லைட்
சன் பீஸ்ட் மேரி லைட்

ஒரு பிஸ்கெட்டுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு!

பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஒரு பிஸ்கெட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஐ.டி.சி. நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மணலி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதற்காக இரண்டு ‘சன் பீஸ்ட் மேரி லைட்' பிஸ்கட் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட் கவரில் 16 பிஸ்கட்டுகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அதில் 15 பிஸ்கட்டுகள்தான் இருந்தன. இதுகுறித்து அவர் கடைக்காரரிடமும், அந்த பிஸ்கட் நிறுவனமான ஐ.டி.சி. நிறுவனத்திடமும் முறையிட்ட போது சரியான பதில் இல்லை. இதையடுத்து அவர் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவுக்கு ஐ.டி.சி. நிறுவனம் தரப்பில் அளித்த விளக்கத்தில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் எடை 76 கிராம் என்ற அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டுக்கு உள்ளே உள்ள பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. பொதுவாக வணிக சட்டத்தின்படி ஒரு பாக்கெட் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களில் 4.5 கிராம் வரை குறைவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம், "ஓர் உணவுப் பொருளை பாக்கெட் செய்யப்பட்ட பின்னர் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது அல்லது காற்று, மழை போன்ற இயற்கையான காரணங்களால் 4.6 கிராம் எடை குறையலாம் என்று வணிக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சலுகை பிஸ்கட்டுகளுக்கு கிடையாது. நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்ததற்காகவும், சேவைக் குறைபாட்டிற்காகவும் வழக்குத்தொடுத்த்த டெல்லி பாபுவுக்கு ஐ.டி.சி நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்." என்று தீர்ப்பு அளித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com