புதுவித தங்கக் கலப்படம் - தூய்மையைக் கெடுக்கும் ரீனியம்!

Rhenium in gold
தங்கத்தில் கலப்படம் செய்வதாகக் கூறப்படும் ரீனியம்
Published on: 

அண்மைக் காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. மக்கள் தங்கத்தில் முதலீட்டைப் போடலாமா என்று எண்ணும் வேளையிலேயே, புதிய பயமும் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

உணவில் கலப்படம் என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், தற்போது தங்கத்தில் கலப்படம் நடப்பதாகவும், அதிலும் முக்கியமாக அந்த கலப்படத் தங்கத்தினாலான நகையின் தூய்மையை ஆய்வு செய்தால்கூட கண்டுபிடிக்க முடியாது என்ற அதிரடிச் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகக் பகிரப்பட்டு வருகிறது.

ரீனியம் எனும் வேதிப்பொருளை தங்கத்தில் கலந்தால், நகையில் உள்ள தங்கத்தின் தூய்மையைப் பரிசோதிக்கும் இயந்திரத்தால்கூட இந்த வேதிப்பொருள் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

மிக அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்ட ரீனியம் எனும் வேதிப்பொருள், பொதுவாக விமான எஞ்சின்கள், பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. முதலில், ஒரு கிராம் ரீனியம் பவுடரை, 7.83 கிராம் எடையுடைய 24 காரட் தங்கத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், அதில் கலப்பு உலோகங்களுடன் சேர்த்து 9.58 கிராம் எடையுடைய நகை ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நகையை ஜோத்பூரில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் ஆய்வு செய்தபோது, 22 காரட் ஹால்மார்க் தங்கநகை என்று காண்பித்தது. ஆனால், உண்மையில் அந்த நகையில் 81.7% மட்டுமே தங்கம் கலக்கப்பட்டுள்ளதால், அது 20 காரட் தங்கம் என்றே காட்ட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, வழக்கமாக தங்கத்தின் தூய்மையைச் சோதனை செய்யும் நடைமுறைகளின் செயல்திறனைக் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இருப்பினும், இது ஒரு சோதனையின் முடிவு மட்டுமே என்றும், அனைத்து முத்திரையிடும் மையங்களையும் அல்லது தங்கத்தின் தூய்மையைச் சோதனையிடும் இயந்திரங்களையும் ஏமாற்ற முடியும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ரீனியத்தின் உருகுநிலை 3,100 டிகிரி செல்சியஸை விட அதிகமாகும். இது, பொதுவாக நகைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுமார் 1,050-1,100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைவிட மிகவும் அதிகம். எனவே, உரிய ஆய்வுக்குப் பிறகே இதுகுறித்த தெளிவான விளக்கங்களை அளிக்க முடியும் என்று பல்வேறு மாநிலங்களின் நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துவருவதால், தங்கம் வாங்குபவர்கள், உரிய முன்னெச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கம் வாங்குபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை:

  • ஹெச்.யூ.ஐ.டி. எனப்படும் ஆறு இலக்க ஹால் மார்க் தனித்துவக் குறியீட்டைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

  • பி.ஐ.எஸ். சின்னம், தூய்மைக்கான முத்திரை

  • பெறப்படும் ரசீதில் தங்கத்தின் எடை, தூய்மை, அனைத்து விதமான பொருந்தக்கூடிய கட்டணங்களும் சரியான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.

  • முடிந்தவரை நம்பகமான இடத்திலேயே வாங்க முயல வேண்டும்.

  • தங்கத்தின் தூய்மை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட பி.ஐ.எஸ். சோதனை மையங்களில் உரிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram