வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு எகிறி இருப்பதால் அதில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் வெள்ளியின் விலையின் ஏற்ற இறக்கங்களைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இதில் கவனம் தேவை எனவும் வெள்ளி விலை திடீரென சரியக்கூடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
வெள்ளியின் விலை ஓர் அவுன்ஸ் 51.25 டாலர்கள் என்ற அளவுக்கு கடந்தவாரம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதன் விலை 73 சதவீதம் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வோ இதுவரை 53 சதவீதம் தான்.
வரலாற்றில் வெள்ளியின் விலை 40 டாலர்களைத் தாண்டுவது இது மூன்றாவது முறை. ஏற்கெனவே 1980-இல் இதன் விலை 49.45 டாலர்கள் என்ற உச்சத்தை எட்டி இருந்த து. 2011இல் 49.8 டாலர்கள் என்ற உச்சத்தைத் தொட்டது.
முந்தைய உயர்வுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்களும் பிந்தைய உயர்வுக்கு உலகப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்ட சூழலும் காரணமாக அமைந்தன. இந்த முறை வெள்ளி விலை உயர்வுக்கு தொழில்துறைப் பயன்பாடு அதிகரித்திருப்பதும் உலக அளவில் நாணயத்தின் நிலையற்ற தன்மையும் ஈடிஎப் வாயிலாக வெள்ளியில் முதலீடு செய்வதும் இத்துடன் இதன் விலையை வைத்து ஊக வர்த்தகம் செய்யப்படுவதும் காரணமாகச் சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு விலை உயர்வுகளின் போதும் வெள்ளிவிலை உச்சத்தை எட்டிய நிலையில் திடீரென வீழ்ச்சி அடைந்தது. ஐம்பது சதவீத வீழ்ச்சி. இம்முறையும் அதே விலை உயர்வை வெள்ளி எட்டிவிட்டது. நீங்கள் வரலாற்றை நம்புகிறவர் என்றால் மீண்டும் வரலாறு திரும்பவும் நிகழலாம் என்பதையும் நம்பவேண்டும். எனவே எச்சரிக்கை தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
வரும் மாதங்களில் வெள்ளி சுமார் 35 டாலர்கள் என்ற அளவுக்கு வீழ்ச்சி அடையக்கூடும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது. எனவே வெள்ளி ஈடிஎப்களில் முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் செய்வது நல்லது.
தங்கத்தைப் பொறுத்தவரை அதன் விலை மேலும் உயரக்கூடும் என உலக தங்க கவுன்சில் கூறி உள்ளது. அமெரிக்க முதலீட்டு நிறுவனமான கோல்மேன் சாக்ஸ், தங்கம் விலை மேலும் உயரலாம் என கருத்து தெரிவித்துள்ளது.