சன் நியோ இந்தி சேனல்
சன் நியோ இந்தி சேனல்

சன் டிவியின் இந்தி சேனல்... ஒரு வாரத்தில் ஓ.கே.!

சன் குழுமத்தைச் சேர்ந்த சன் நியோ எனும் பொழுதுபோக்கு இந்தி தொலைக்காட்சி சேனல் கடந்த 15ஆம் தேதி இலவச சேனல் தொகுப்பில் இணைந்தது. இந்த ஒரு வாரத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தொலைக்காட்சித் தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சன் குழுமத்தின் வங்காள சேனலான சன் பங்களா கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சன் மராத்தி அலைவரிசை 2021 அக்டோபர் 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

அந்த இரண்டு சேனல்களுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைக்கவே, இந்தி சேனலையும் தொடங்க சன் குழுமம் தீவிரமாக இறங்கியது. ஆனால் இடையில் கொரோனா வந்துபோனதில் இந்தி சேனல் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

அறிவிக்கப்பட்டு நீண்ட காலத்துக்குப் பிறகு, இந்தி இலவச சேனல் சந்தையில் சன் நியோவும் புகுந்துள்ளது. ஏற்கெனவே அங்கு கொடிநாட்டியிருக்கும் டாங்கல், நாட்டின் முதல் ஐந்து முன்னணி இடங்களில் உள்ளது. நாட்டின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் பத்து இலட்சக்கணக்கான இலவச டிடி டிஷ்- குடை ஆண்டனா பார்வையாளர்களிடையே செமாரூ, இசரா, நசரா ஆகிய தொலைக்காட்சிகளைவிட டாங்கலே முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சன் குழுமத்தின் சன் நியோ தொலைக்காட்சியானது எஸ்டி, எச்டி என இரண்டு தரத்திலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.

இந்தி பொழுதுபோக்குத் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சந்தையில், ஏற்கெனவே, சோனி, ஜீ குழும சேனல்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னிந்திய சேனல் ஒன்று மராத்தி, வங்காளத்தை அடுத்து இந்தியில் கால்பதித்து மெல்ல வெற்றிப்படிகளில் நடைபோடத் தொடங்கியிருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்கள், துறை வல்லுநர்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com