ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில் துறைபல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழில்களையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு மற்றும் 26.90 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தை தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழும தலைமை நிதி அலுவலர் பி.பி.பாலாஜி ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் அருண் ராய், சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் டாடா குழும அதிகாரிகள் பங்கேற்றனர்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.