Paytm க்கு இப்படி ஒரு நிலையா? அடடா

விஜய் சேகர் சர்மா
விஜய் சேகர் சர்மா
Published on

பேடிஎம் நிறுவனம் பாடம் கற்றுக்கொண்டதாகவும், பொறுப்புகளை வேறு விதமாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஒப்புக்கொண்டுள்ளார்.

விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக பேடிஎம்-மின் வங்கி தொடர்பான செயல்பாடுகளை முடக்குவதாகவும், இதற்கு மேல் புதிய வாடிக்கையாளர்களை இணைக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கடந்த பிப்ரவரி மாதம் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பேடிஎம் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒன் 97 (One97) கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

இந்த நிலையில், பேடிஎம் நிறுவனம் பாடம் கற்றுக் கொண்டதாகவும், பொறுப்புகளை வித்தியாசமாகக் கையாண்டிருக்க வேண்டும் என்றும் விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.

பேடிஎம் சேவைகளுக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்து ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில், இப்போது அவர் இதை ஓப்புக் கொண்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் ஒன்றில் பேசிய விஜய் சேகர் சர்மா, ஒரு நிறுவனம் பொதுத்தளத்தில் செயல்படும்போது பொறுப்பும் முதிர்ச்சியும் வரும். தொழில்ரீதியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் தான் முக்கியம். ஆனால், அந்த பாடங்களுக்கு நாங்கள் செவிசாய்க்கவே இல்லை. இப்போது, நாங்கள் முன்பு இருந்ததை விட மிகவும் சிறப்பாக இருக்கிறோம் என்று சொல்லலாம்" என்று சர்மா கூறினார்.

அதே சமயம் முக்கியமான தேர்வு எழுதச் சென்ற மகள் விபத்தில் சிக்கி ஐசியுவில் இருந்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வுக்கு ஆட்பட்டதாக அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com