ஏர் கேரளா - மலையாளிகள் தொடங்கும் விமான சேவை தெரியுமா?

மாதிரிப் படம்
ஏர் கேரளா
Published on

இலட்சக்கணக்கான மலையாளிகள் வசிக்கும் வளைகுடா நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையே அன்றாடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விமானத்தில் வந்துசெல்கிறார்கள். இந்த நிலையில் கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இருவர் ஏர் கேரளா எனும் விமான சேவையைத் தொடங்கவுள்ளனர். இதற்கான அனுமதியை இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது. 

இந்தப் புதிய விமான சேவை அடுத்த ஆண்டுதான் தன் பயணத்தைத் தொடங்கும். முதலில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களுக்கு இடையே விமானங்கள் இயக்கப்படும் என்றும் இதன் உரிமையாளர்களான துபாயைச் சேர்ந்த அபி அகமது, அயூப் கல்லடா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஜெட்பிளை எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய நிறுவனத்தில், அபி 67% பங்கும், அயூப் 37% பங்கும் வைத்துள்ளனர். கண்ணூரைச் சேர்ந்த அபி, கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பயண ஏற்பாட்டுச் சேவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். புலபெயர்ந்து வாழும் மலையாளிகள் தரப்பில் இதில் முதலீடுசெய்ய ஆர்வமிருந்தால், புதிய பெயரில் நிறுவனம் தொடங்கி இயக்குநர் குழுவை மாற்றியமைக்கத் தயார் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.   

கொச்சியை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் உள்நாட்டு விமானங்களை இயக்கவுள்ளது. ஏடிஆர் 72-600 வகை விமானங்களை இயக்கப்படும் என்றும் 20 விமானங்களை எட்டியபின்னர் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, கடந்த 2005ஆம்ஆண்டு கேரள மாநில அரசின் சார்பில் விமானப் போக்குவரத்து சேவை தொடங்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் 19 ஆண்டுகள் ஆகியும் அது கைகூடவில்லை. இப்போது, தனியார் நிறுவனம் அதைக் கையில் எடுத்திருக்கிறது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com