பி.ஆர்.எஸ். ஓபராய்
பி.ஆர்.எஸ். ஓபராய்

94 வயதில் மறைந்த ஓட்டல் சாம்ராஜ்ய அதிபர் பி.ஆர்.எஸ். ஓபராய் யார்?

பிரபல ஓட்டல் குழும அதிபர் பிருத்வி ராஜ் சிங் ஓபராய் புதுதில்லியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.

எம்.எஸ். ஓபராயால் 1934ஆம் ஆண்டு ஓபராய் ஓட்டல் நிறுவனம் தொடங்கப்பட்டது. அவர் 2002ஆம் ஆண்டில் இறந்த பிறகு, அவரின் இரண்டாவது மகன் பிக்கி ஓபராய் என்ற பி.ஆர்.எஸ். ஓபராய் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அதையடுத்து ஓபராய் குழுமம் படிப்படியாக விரைவான வளர்ச்சியைக் கண்டது. தி ட்ரைடண்ட் என்கிற புதிய பெயரில் வரிசையாக பல நகரங்களில் ஓட்டல்களை உருவாக்கினார். அதுவே தனியொரு பிராண்டாக வர்த்தகத்தில் முன்னிலை பெற்றது.

ஜெய்ப்பூரில் ராஜ்விலாஸ், உதய்ப்பூரில் உதய்விலாஸ், ஆக்ராவில் அமர்விலாஸ், ரந்தம்பூரில் வன்யவிலாஸ், சிம்லாவில் வைல்டுஃபுளவர் ஹால் என தனி அடையாளங்களாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு தன்னுடைய ஓட்டல்களை பிக்கி உருவாக்கினார்.

கல்கத்தாவின் கிராண்டு முதல் இந்தோனேசிய நாட்டின் லம்போவில் கடற்கரை சொகுசுவிடுதி, மொரோக்கா நாட்டில் மரக்கேஸ்வரை பிக்கியின் பெயரைச் சொல்லும் ஓபராய் குழும அடையாளங்கள் ஆகும்.

பெரிதாக அல்ல சிறப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் இவரின் தொழில் கொள்கையாக இருந்தது.

இரண்டு பிராண்டு ஓட்டல்களையும் கொண்ட ஈஸ்ட் இண்டியா ஹோட்டல்ஸ் நிறுவனத்தை, சுற்றுலா, விருந்தோம்பல் துறையில் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் முதல் நிலைக்குக் கொண்டுவந்தார். பிக்கி ஓபராய் முதுமை- உடல்நிலை காரணங்களால் ஈஸ்ட் இண்டியா ஹோட்டல்ஸ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆண்டில் விலகினார்.

முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டில் மைய அரசு இவரின் தொழில் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, பத்மவிபூஷண் விருதை வழங்கிச் சிறப்பித்தது.

மறைந்த பிக்கி ஓபராய்க்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com