பணத்தை இஷ்டம் போல் அச்சடித்தால்?

பணத்தை இஷ்டம் போல் அச்சடித்தால்?

ஜிம்பாப்வேயின் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே 2008-இல் அந்நாட்டுப் பணத்தை எக்கச்சக்கமாக அச்சடித்து, பணவீக்கத்தை உருவாக்கினார். அப்போது உலகமே இப்படி பணத்தை அச்சடிப்பதை கண்டித்தது.

ஆனால் இச்சூழலில் அச்சமயத்தில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியால் உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகி கடனில் மூழ்கின. இதை சமாளிக்க இந்த வங்கிகளும் பணத்தை அச்சடித்துக்கொண்டன.

தேவைக்கேற்ப பணத்தை அச்சடிப்பது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.  அமெரிக்க எழுத்தாளரும் தொழிலதிபருமான ராபர்ட் கியோஸாகி பணம் என்பது போலியான சொத்து என்று சொல்கிறார். இது முட்டாள்தனமான கருத்தாகத் தோன்றலாம். ஆனால் இந்த கருத்தின் பின்னால் இருக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

உலக நாடுகளின் வங்கிகளில் பல கணக்கு வழக்கில்லாமல் அச்சடிக்கும் பணத்தால் என்ன பிரச்னை உருவாகும். இதனால் மக்கள் எப்படி பாதிப்படைவார்கள் என்பதை பார்க்கலாம்.

முதலில் கொஞ்சம் வரலாறு .

தற்போது புழக்கத்தில் இருக்கும் 'பணம்' என்ற வடிவம் உருவாகி சுமார் 3000 வருடங்கள் இருக்கலாம். அதற்கு முன்பு பண்ட மாற்று முறை தான்.

கிமு 600 இல் லிடியாவின் அரசர் அலியாட்டிஸ் என்பவர்  முதல் நாணயத்தை அறிமுகப்படுத்தினார். தங்கமும் வெள்ளியும் கலந்த கலவையில் உருவான நாணயம் அது.

கிமு 700 இல் சீனாவில் பேப்பரில் உருவான 'பணம்' (Currency) அறிமுகமானது. பணத்துக்கு சுயமான மதிப்பு இல்லை. அது மக்கள் அதன்மேல் வைக்கும் மதிப்பின் குறியீட்டின் அளவிலானது.

ஆரம்ப காலகட்டத்தில் நாணயத்தில் இருக்கும் தங்கம் (அ) வெள்ளிக்கு ஏற்றாற்போல் அதன் மதிப்பு இருந்தது. பின்னர் பல்வேறு நாடுகள்  பல்வேறு முறைகளுக்கு ஏற்ப பணத்தை அச்சடித்தன.   விகிதாச்சார பண விகிதம் என்ற முறைப்படி நாடுகள்  25%  லிருந்து  40%   வரை பணநோட்டுகளுக்கு ஈடான தங்கம் அல்லது வெள்ளியை கையிருப்பாக  வைத்திருக்கும். மீதமுள்ள 60%-70%  அரசின் பாதுகாப்பு பத்திரங்கள்  உத்தரவாதம் தரப்படும்.இந்தியா  1957 வரை இந்த முறையை பின்பற்றியது. தற்போது இந்தியா minimum reserve system என்ற முறைக்கேற்ப பணத்தை அச்சடிக்கிறது.

ஒப்புறுதி அளிக்கப்பட்ட பணம், பணப்புழக்கம் உருவாக்கல் என இரண்டு விஷயங்கள் உள்ளன.

ஒப்புறுதி அளிக்கப்பட்ட பணம் என்றால் அரசு ஆணைப்படி, கட்டணமாக செலுத்தும் தகுதிபெற்ற நாணயம். அமெரிக்காவில் இது 1971க்கு முன்னால் 80 சதவீதம் கடன், 20

 சதவிதம் தங்கக் கையிருப்பு என்ற அளவில் அச்சிடப்பட்டு வெள்யிடப்பட்டது. ஆனால் இப்போது 100 சதவீதம் கடன் என்ற அளவிலேயே முழுமையாக அச்சிடப்படுகிறது

( ராபர்ட் கியோஸ்கி, ஃபேக், பக்கம் 170).

பணப்புழக்கம் உருவாக்கல் என்பது நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்காக வங்கிகள் நானயத்தை கூடுதலாக அச்சிட்டு புழக்கத்தில் விடுதல். இதில் கடைசியில் என்ன ஆகிறது என்று பார்த்தால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிறார்கள்.

2008-&2018 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின்

ரிசர்வ் வங்கிகள் நாட்டின் ‘பொருளாதாரத்தைப் பெருக்குவதற்காக‘ 23 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டன. கடந்த 12 மாதங்களில் இதுபோன்ற

ரிசர்வ் வங்கிகள் முன்பு சொன்ன 2008&-2018  காலகட்டத்தை விட மிகக் கூடுதலாக பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளன.

பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க, பணத்தை அச்சடிப்பது என்பது விரும்பிய பலனைத் தரவில்லை என்பதே வரலாறு. இது நடுத்தர, ஏழை மக்களை பாதித்தே வந்துள்ளது. பழைய சீனம், ரோமப் பேரரசு, ஜெர்மனி(1920), 1990களில்

சோவியத் யூனியன் நாடுகள், ஜிம்பாப்வே, வெனிசுலா போன்ற நாடுகள் இதற்கு உதாரணம். ஜெர்மனியிலும் ஜிம்பாப்வேயிலும் காய்கறி வாங்கக்கூட வண்டி நிறையப் பணம் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு பணம் மதிப்பிழந்து போயிருந்தது.

சர்வதேச அளவில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் வட்டிவிகிதமானது மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஐ.எம்.எப் அமைப்பின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரான ஒலிவியர் ப்ளாங்கர்ட், வலிமையான நிதி, நாணயக் கொள்கைகளைக் கொண்ட நாடுகள், தம் நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்யவெண்டுமானால் கடன் பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்(2019).

ஆனால்  சர்வதேச நிதிச் சந்தையில் வட்டிவிகிதம் கூடுமேயானால் வட்டி அதிகம்  கட்ட நேர்ந்து பணப்புழக்கம் பாதிப்படையும்.

கடன்வாங்கி நிதி திரட்டுவதை பல பொருளாதார அறிஞர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. வட்டிவிகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், வட்டி அதிகம் கட்ட நேரிட்டு, சமாளிக்க முடியாமல் போய்விடும். ஒலிவியர் ப்ளான்கர்ட் அமெரிக்காவில் ஜிடிபி வளர்ச்சி விகிதம், கடன்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருப்பதால், மேலும் கடன்கள் வாங்கலாம் என்கிறார். ஆனால் சர்வதேச நிதிச்சந்தையில் நிலவும் நிச்சயமின்மை ஆபத்துக் கான வாய்ப்பை எப்போதும் கொண்டுள்ளது.

முதல் காகித நாணயம் அச்சடித்த சீனாவின் தாங் வம்சம் ஒரு காலகட்டத்தில் இஷ்டம் போல் பணத்தை அச்சடித்தது. தொடர்ச்சியாக சீனா மிகப் பெரிய பொருளாதார சிக்கலைச் சந்தித்தது. 1455 இல் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக காகிதப் பணத்தை ஒழித்தது. 

உலகின் பல ரிசர்வ் வங்கிகள் ட்ரில்லியன் கணக்கில் நாணயத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் இக்காலகட்டத்தில் பணமாக சேமித்து வைத்தால் எதிர்மறை வட்டி விகிதத்தில் வைத்திருப்பதுபோல் ஆகிவிடலாம். அல்லது  மக்கள் தங்கள் பணத்தை வைத்திருப்பதற்கு வங்கிக்குப் பணம் கொடுப்பது போல் ஆகலாம். இந்த  பயம் வராமல் காக்கும் பொறுப்பு அரசுகளுடையது.

பணம் அச்சடிப்பது, பணவீக்கம் இரண்டும் இணைந்து, வாங்கும் சக்தியைக் குறைத்து,

சேமிப்பில் இருக்கும் பணத்தின் மதிப்பையும் வீழ்ச்சி அடையச் செய்யும்.

பணவீக்கத்தால் என்ன நடந்துள்ளது? 2008-ல் 100 ரூபாய்க்கு  இருந்த வாங்கும் சக்தி 2020-இல் 246.27 ரூபாயின் வாங்கும் சக்தியாக மாறி உள்ளது. அதாவது 2008-ல் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 2020-இல் 246.27 ரூபாய் இருந்தால்தான் வாங்க முடியும்.

சந்தையில் நம்பிக்கை நிலவும்வரை பணமானது உலகச் சந்தையை ஆளும்.  2021-இலும் உலகின் ரிசர்வ் வங்கிகள் தொடர்ந்து பணத்தை அச்சடித்துக் கொண்டுதான் இருக்கப்போகின்றன, முன்பைக் காட்டிலும் கூடுதலாக.

இது போன்ற சிக்கலான சூழலிலிருந்து மீண்ட கதையும் உண்டு . இங்கிலாந்து அரசரான எட்டாம் ஹென்றி   மற்றும்  அவரது மகன் ஆறாம் எட்வர்டு காலத்தில் தங்க வெள்ளி நாணயங்களில் கலப்படம் செய்தார்கள். அதாவது நாணயங்களின் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை குறைத்தனர்.

மக்கள் பழைய நாணயங்களை நல்ல நாணயங்கள் என்றும் புதிய நாணயங்களை கெட்ட நாணயங்கள் என்றனர். இது நாட்டில் பெரிய சிக்கலை உருவாக்கியது. 1558 ஆட்சிக்கு வந்த எட்டாம் ஹென்றியின் மகளான முதலாம் எலிசபெத்  புழக்கத்திலிருந்த கெட்ட நாணயங்களை  திரும்ப பெற்றுக் கொண்டு சரியான மதிப்புள்ள நல்ல நாணயங்களை வெளியிட்டார்.பொருளாதாரம் உயர்வு பெற்றது

தற்போதுள்ள சூழலில் உலகில் எந்த தலைவர் எலிசபெத் ராணியைப்  பின்பற்றி தமது நாட்டின் பணத்தின் மதிப்பை உயர்த்துவார்? விடையை தேடிக் கொண்டிருக்கிறேன்.

பிப்ரவரி, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com