
சரிந்துவரும் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்றுவதற்காக நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 3000 கோடி டாலரை செலவழித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரூபாயின் மதிப்புச் சரிவு பொதுவாக டாலர் கையிருப்பு குறையும்போது அதிகமாக நிகழ்கிறது. ஏற்றுமதியின் அளவு குறைவாகவும் இறக்குமதியின் அளவு அதிகரிக்கும்போதும் இந்த நிலை ஏற்படும்.
இறக்குமதியாகும் பொருட்களுக்காகத் தரப்பட வேண்டிய அந்நியச் செலாவணி குறிப்பாக டாலரின் கையிருப்பு குறிப்பிட்ட அளவு இருக்கவேண்டும். இது குறையும்போது இந்திய நாணயத்தின் மதிப்பிலும் இறக்கம் ஏற்படும்.
பன்னிரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த வாரத்தில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ரூபாயின் மதிப்பு சில நாள்களில் விரைவாகச் சரிந்தது. மீண்டும் மெல்ல மதிப்பு கூடினாலும்கூட, சரிவின் போக்கு குறையவில்லை.
இந்தப் போக்கு கடந்த ஜூனிலேயே தொடங்கிவிட்டது. மே மாதம்வரை ஓரளவுக்கு சமாளிக்கக்கூடிய அளவுக்கு அந்நியச் செலாவணியின் கையிருப்பு இருந்துவந்தது. அதன்பிறகு நிலைமை பலவீனம் அடையவே, ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டது.
ஜூன் முதல் செப்டம்பர்வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியானது சுமார் 1800 கோடி டாலர், அக்டோபரில் 1000 கோடி டாலர் ஆகமொத்தம் சுமார் 3000 கோடி டாலரைச் செலவழித்துள்ளது.
எஸ்பிஐயின் ஆய்வு முடிவில் இத்தகவல் கிடைத்துள்ளது.