தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி அறிவியல் பொறியியல் மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட், புரோகிராமர் திறன் பயிற்சித் திட்டத்திற்காக கூகுள், யுனிட்டி நிறுவனத்தினருக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கூகுள் பிளே பார்ட்னெர்ஷிப்ஸ், APAC பார்ட்னர் மேனேஜ்மென்ட் & ஈகோஸிஸ்டெம் பார்ட்னெர்ஷிப்ஸ் இயக்குநர் குணால்சோனி, கூகுள் இந்தியா பிளாட்பார்ம்ஸ் & டிவைஸ், அரசாங்க விவகாரங்கள் - பொதுக் கொள்கை பிரிவுத் தலைவர் அதிதி சதுர்வேதி, சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கூகுள் பிளே- யுனைட்டி கேம் டெவலப்பர் பயிற்சித் திட்டம் என்கிற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
இது கூகுள் பிளே, யுனைட்டி, மற்ற முன்னணி கேம் துறையினர் இணைந்து வழங்கும் ஒரு சிறப்பு திறன் பயிற்சி ஆகும். கேம் டிசைன், டெவலப்மென்ட், மானிட்டைசேஷன் ஆகியவற்றில் உலகத் தரத்திலான திறன்களை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி அறிவியல் துறை இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கும் நடப்பாண்டில் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பாகும்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இலவச யுனைட்டி லைசென்ஸ், இலவசப் பயிற்சி, தேர்வு தயாரிப்பு அமர்வுகள், தொழில் நிபுணர்களுடன் சந்திப்பும் உரையாட வாய்ப்பும், ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்கியூபேட்டர், முதலீடுகளுக்கான வாய்ப்பு ஆகியவை அடங்கும்.
முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 250 மாணவர்களுக்கு இந்த திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது,
ஒவ்வொரு மாணவருக்கும் தலா 32,000 ரூபாய் (அமெரிக்க டாலர் 378) மதிப்புடைய யுனைட்டி லைசென்ஸ் வழங்கப்படவுள்ளது. பயிற்சியின் மொத்த மதிப்பு 80,32,500 ரூபாய் (எண்பது லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய்) ஆகும்.
உலகளாவிய கேமிங் தொழிலில் தற்போதைய சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் ஆகும், 2029-க்குள் இது 9 பில்லியன் டாலராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.