‘விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் தனியாக சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார்.’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை திநகரில் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:
தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லோரும் தனியார் பள்ளி நோக்கி செல்வதற்காகத்தான் தி.மு.க. அரசு இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறதா? அரசு பள்ளியை விட தனியார் பள்ளி அதிக மாணவர்கள் படிக்கின்றனர்.
புதிய கல்விக்கொள்கையில் இந்தியை பிரதமர் ஒருபோதும் திணிக்கவில்லை. மும்மொழிக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படாது. தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல் அரசு பள்ளிகளில் பல மொழிகள் படிக்கும் வாய்ப்பு இல்லை. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பல்வேறு மொழிகளில் கற்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் 3 மொழிகள் பயில்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒருமொழிக்கொள்கை தோற்றுவிட்டது. நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது. மும்மொழி தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது எத்தனை பேருக்கு தெரியும்? விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் தனியாக சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார். எஸ்.ஏ. சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் விஜய்யின் பள்ளி நடத்தப்படுகிறது.விருப்ப மொழியாக இந்தி அல்லது பிற மொழி பயிலலாம் என 2018இ ல் சீமான் கூறி இருந்தார்.
விஜய் உட்பட பலரும் வீட்டில் ஒருகொள்கையும் வெளியே ஒரு கொள்கையும் பின்பற்றுகின்றனர். திணிக்கப்படாத நிலையில் இந்தி திணிப்பு என்று இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்துகின்றது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் குறித்து அன்பில் மகேஸ் கடிதம் எழுதுவாரா? அப்படி அன்பில் மகேஸ் எழுதினால், அன்று மாலையே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து அதுபற்றி பேச நான் தயார்.
பாஜக சார்பில் மார்ச் 1ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். 3 மாதங்களுக்கு வீடு வீடாக சென்று 3ஆவது மொழி தொடர்பாக விவரங்களை சேகரிப்போம். 3ஆவது மொழி வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். விருப்ப மொழி குறித்து கருத்து கேட்டு குடியரசுத் தலைவருக்கு விவரங்களை அனுப்புவோம் என்றார்.