ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசு! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

மத்திய பாஜக அரசு, ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்தி மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அப்போது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி குடியரசுத்தலைவருக்கும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின் கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ளார்.

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் முதல்வரின் இதுதொடர்பான பதிவைப் பகிர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் பலம் அதன் பன்முகத் தன்மை. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் குரல் எழுப்ப உரிமை உள்ளது.

ஆனால், மோடி அரசு, ஆளுநர்களைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது.

இது கூட்டாட்சி மீதான ஆபத்தான தாக்குதல். இதைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com