சந்திராயன் -3 வெற்றியை அடுத்து, சூரியன் தான் நமது இலக்கு என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரை இறங்கியதும், இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி காணொலிக் காட்சியின் மூலம் வாழ்த்தினார்.
சந்திராயன் -3 விக்ரம் லேண்டரை நிலவில் இறக்கும் பணிகள் சரியாக இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கின. முதற்கட்டமாக லேண்டரின் வேகத்தைக் குறைக்கும் செயல்பாடு வெற்றிகரமாக முடிந்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 800 மீட்டர் உயரத்தில் செங்குத்தான நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
அதன்பிறகு, தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்வதில் லேண்டர் ஈடுபட்டது. அங்குமிங்குமாக நகர்ந்தபடி சற்றே சாய்ந்தும் பின்னர் செங்குத்தான நிலையில், நிலவின் தரையில் வெற்றிகரமாக கால்வைத்தது, சந்திராயன் -3 விண்கலம்.
காணொலிக் காட்சி வழியாக நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி, லேண்டர் தரையிறங்கியதும் தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் விண்வெளித் துறைக்கு வரலாற்று சிறப்பு மிகுந்த நாள் இன்று. நிலவை நோக்கிய சந்திரயான் -3 பயணத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்காக வாழ்த்துகள். இதற்கு முன் எந்த நாடும் சந்திரனின் தென் துருவத்திற்கு சென்றதில்லை. நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் நாம் அங்கு சென்றுள்ளோம்.” என்றார்.
மேலும், ”முன்பெல்லாம் குழந்தைகள் நிலா வெகு தொலைவில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இனி சுற்றுலா செல்லும் தூரத்தில் இருப்பதாகச் சொல்வார்கள்.
இந்த தருணம் புதிய இந்தியாவின் விடியல். நம் கண் முன்னே புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. புதிய ஆற்றலும் புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது. ஓய்வின்றி விஞ்ஞானிகள் உழைத்ததற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. இந்த வெற்றி மனித குலம் முழுமைக்கும் உரியது. இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள். அடுத்து சூரியனுக்கான பயணத்தைத் தொடங்குவோம்.” என்று பிரதமர் மோடி பெருமிதம் பொங்கப் பேசினார்.