சென்னை கடந்த ஆகஸ்ட் 22 இல் தனது 386ஆவது ஆண்டை கொண்டாடியது. இதையொட்டி சென்னை கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் புகைப்பட கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல் மற்றும் எழுத்தளர்களி கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதை அந்திமழை, காலச்சுவடு, ஆழி, முதல் மொழி, டிஸ்கவரி பேலஸ் இணைந்து ஒருங்கிணைத்திருந்தன.
இந்த நிகழ்வின் தொடக்கமாக, சென்னையை மையமாக கொண்ட புத்தக் காட்சி மற்றும் புகைப்படக் காட்சியை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்.
புகைப்படக் கலைஞர் புருசோத் அப்புவின் சென்னையின் அடையாளங்களாக திகழும் ரிப்பன் பில்டிங் தொடங்கி அண்ணா உயிரியல் பூங்கா வரையிலான புகைப்படங்களை காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக வெங்கடேஷ் சக்ரவர்த்தி இயக்கிய ‘Chennai - The Split City’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த படம் குறித்து வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் மனைவி ப்ரீத்தம் பங்கேற்றுப் பேசினார்.
எழுதுபதுகளிலிருந்து சென்னை எப்படி மாறிவந்திருக்கிறது என்பதை அசை போட்டார். 2004 இல் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டபோது சென்னை எப்படி இருந்தது என்பதை விவரித்தார்.
இதையடுத்து எழுத்தாளர்கள் தி.பரமேசுவரி, சுந்தரபுத்தன், ரமேஷ் வைத்யா, மு.து பிரபாகரன், ரேகா சிவன், புகைப்பட கலைஞர் புருசோத் அப்பு ஆகியோர் கலந்துகொண்ட படைப்புகள் வழி சென்னையை அறிதல் என்ற உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வை சுந்தரபுத்தன் நெறியாள்கை செய்தார். சென்னை பற்றி எழுதப்பட்ட படைப்புகளைப் பட்டியலிட்டு இந்த உரையாடலை அவர் தொடங்கி வைத்தார்.
மு.து.பிரபாகரன் தான் எழுதிய அடையாற்றங்கரை நாவலில் இடம்பெற்றுள்ள சென்னையைப் பற்றி உருக்கமாகப் பேசினார்.
ரமேஷ வைத்யா, தான் முதன்முதலில் பள்ளி மாணவனாக சென்னைக்கு வந்தபோது கடற்கரையில் சீரணி அரங்கைக் கண்டதையும் பின் வேலைக்கு வந்த பின் கொரட்டூரில் ஓர் எளிய அறையில் தங்கிய அனுபவத்தையும் சுவைபட விவரித்தார்.
தொலைக் காட்சி பிரபலமான ரேகா சிவன், எதுவும் யாரும் அற்ற ஓர் நிலையில் கோவையில் இருந்து சென்னைக்கு வந்து, தன்னை நிலைப் படுத்திக் கொண்டதை விவரித்தார்.
புகைப்படக் கலைஞர் புருசோத் அப்பு சென்னை மீர்சாகிப் பேட்டை வாசியான தன் சென்னையுடனான பூர்வீகப் பிணைப்புகளை எடுத்துரைத்தார். ஜெயகாந்தன் படைப்புகளில் கண்ட சென்னை வாழ்வைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
தீபாவளி, பொங்கல் விடுமுறைகளில் தான் சென்னை சென்னையாக இருக்கிறது என பரமேசுவரி சொன்னபோது அரங்கில் சிரிப்பு. வடசென்னை, தென் சென்னை இரு பகுதிகளிலும் வசித்த தன் அனுபவங்களை அவர் அழகாக எடுத்துரைத்தார். பணிக்காக சென்னையை விட்டு வெளியேறிய நிலையில் பல ஆண்டுகள் சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பமுடியாத உணர்வையும் அவர் கூறியது மாற்றுக் கோணமாக இருந்தது.
'தங்கள் ஊர்களில் ஜல்லிக்கட்டு, மாடுகள், இயற்கைக் காட்சிகள் என பலர் மார் தட்டிக் கொள்வர். எங்கள் சென்னையிலும் இவை எல்லாம் இருந்தன. தெருவின் நடுவில் ஊரே கூடி பொங்கல் வைப்போம்! கிராமங்களில் இருப்பதாகச் சொல்லும் அத்தனையும் இங்கும் இருந்தன' என மு.து.பிரபாகரன் குறிப்பிட்டார். சென்னையின் மொழி, கலாச்சாரம் என பல விஷயங்களை இந்த உரையாடலில் தொட்டுச் சென்றனர். சென்னைக்கு வந்தபோது முதன் முதலில் கடற்கரைக்குச் சென்று வியந்துபோனதாகவும் பல கனவுக்கோட்டைகள் கட்டியதாகவும் சொன்ன டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பன், ‘அதன் பின்னர் இன்னும் அங்கே போகவே இல்லை’ என வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். எழுத்தாளரான சுரேகா, தனக்கு எப்படி சென்னையை ஆரம்பத்தில் பிடிக்கவே இல்லை என்றவர் இப்போது சென்னைவாசியாகவே மாறிப்போய் விட்டதை நினைவு கூர்ந்தார். ‘சென்னையில் சென்னைக்காரர்கள், சென்னைவாசிகள் என இரு பிரிவு உள்ளது. சென்னைக்காரர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். சென்னைவாசிகள் இங்கே வேலைக்காக இடம்பெயர்ந்து தங்கியவர்கள். சென்னைவாசிகள் இதுதான் நம் ஊர் என்று இந்நகரத்தை நேசிக்கத் தொடங்கினால் பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்’ எனக் குறிப்பிட்டார்.
வெளியே கடுமையான மழை கொட்டித் தீர்த்தபோது, அரங்கில் அனுபவ மழை. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது நினைவுகள் தூவானமாகத் தொடர்ந்தன.