சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை
மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம்-கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மாதவரம்-புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 5 மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் தொடங்கிவைத்தார்.
நகரில் 18 இடங்களில் வரும் 17ஆம் தேதிவரை மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க முடியாதவர்களுக்கு வசதியாக, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்னணு வீடியோ வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தொடக்க விழாவும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகின்றன.
எனவே, பொதுமக்கள் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா" கலை நிகழ்ச்சிகளை இந்த இடங்களில் நேரடியாகக் கண்டுகளிக்குமாறு செய்தி மக்கள்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.