சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் கரியாபந்த் மாவட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் நக்சல் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. மத்திய மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர், சிறப்பு அதிரடி படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து வனப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மெயின்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி, நக்சல் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், இரண்டு பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், கோப்ரா பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் கரியாபந்த் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்டரில் ரூ. 1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட, நக்சலைட் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார் என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.