ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமாரிடம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வீடியோ கால் வாயிலாகப் பேசினார். அப்போது, “வீட்டில் காபி எல்லாம் தராங்களா?” என ஸ்டாலின் கேட்டதுக்கு “அவர்கள் சாப்பிடவே கூப்பிட்டார்கள்” என தினேஷ் குமார் கூற, "தெரிந்திருந்தால் நானே வந்திருப்பேனே" என ஸ்டாலின் சிரித்தபடி பதில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆழ்வார்ப்பேட்டையில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் பேசினார். மகளிர் உரிமைத்தொகை சரியாக கிடைக்கிறதா? விடியல் பயணம் செல்கிறீர்களா என்பது உள்ளிட்ட கேள்விகளை முதலமைச்சர் முன்வைத்தார். வேறு என்ன குறை உள்ளது என்று கேட்டறிந்த ஸ்டாலின், திமுகவில் சேர விருப்பம் உள்ளதா என்று கேட்டு உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டார்.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும், திமுக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, மக்களின் குறைகளைக் கேட்டு அறிந்து, அவர்கள் விருப்பப்பட்டால் திமுகவில் உறுப்பினராகச் சேர்த்தும் வருகின்றனர். அந்தவகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் இன்று திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளருக்கு வீடியோ கால் வாயிலாக பேசினார். ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் தொடர்பாக விசாரித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், ஸ்டாலினிடம் இன்று (நேற்று) காலை முதல் நடந்து வரும் பணிகள் குறித்து விளக்கினார். 2 தொகுதிகளை முடித்து விட்டோம் எனச் சொன்ன அவரிடம், பொறுமையாக பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப வேகமாக பண்ண வேண்டாம் என்றார்.
மேலும், பொதுமக்கள் வீட்டில் காபி எல்லாம் தராங்களா? எனக் கேட்டார் ஸ்டாலின். அவர்கள் சாப்பிடவே கூப்பிட்டார்கள் என மாவட்டச் செயலாளர் தினேஷ் குமார் கூற, "தெரிந்திருந்தால் நானே வந்திருப்பேனே" என சிரித்தபடி கூறினார் முதல்வர்.
மேலும், அங்கிருந்த பொதுமக்களிடமும் வீடியோ கால் வாயிலாக பேசி, திட்டங்கள் வந்து சேர்கிறதா எனக் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட "ஓரணியில் தமிழ்நாடு" முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ் குமார், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, "தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட ஆட்சி தொடர்ந்திட வேண்டும்" என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்! தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!" எனத் தெரிவித்துள்ளார்.