சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி உள்ளன. மேலும், அவையில் விவாதமும் நடைபெறுகிறது.
முன்னதாக, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக, நாதக நிர்வாகிகள் போராடியபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் பாமக முறையீடும் செய்துள்ளது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் விவாதத்தில், பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி , ‘திமுகவுக்கு ஆளுநரை எதிர்த்து போராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவிக்கு நீதிகேட்டு நாங்கள் போராடியபோது அனுமதி வழங்கப்படவில்லை. கைது செய்யப்பட்டோம்’ என கூறினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஜிகே மணி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை எல்லாம் அனுமதிக்காமல் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இது அவருக்கு நன்றாகவே தெரியும். போராட்டம் நடத்த சில பகுதிகள் உள்ளன. அங்கு மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய திமுகவினர் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஜி.கே. மணி கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்” என்றார்.