மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடர மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும் கள ஆய்வுக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 22ஆம் தேதி திருப்பூருக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொள்ள இருந்தார்.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி சென்னையில் இருந்த முதலமைச்சர் வழக்கம் போல காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையிலேயே ஓய்வெடுக்க அவரை அறிவுறுத்தினர். இதனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளே முதலமைச்சர் தனது அலுவல் பணிகளை அங்கிருந்தே தொடங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கான முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்பது குறித்து தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்ததாக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, எத்தனை மனுக்களுக்கு தீர்வுக் காணப்பட்டது என்பவை குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுடனும் முதலமைச்சர் வீடியோ காலில் பேசினார்.

பின்னர் பிரதமரின் தமிழ்நாடு பயணத்தின்போது அவரிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை மருத்துவமனையில் இருந்தபடியே தயாரித்து அதனை தலைமைச் செயலாளர் மூலமாக முதலமைச்சர் அனுப்பி வைத்தார். அதனை பிரதமரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் நடைபெற்றுவரும் உறுப்பினர் சேர்க்கை செயல்பாடுகள் குறித்து, திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று சிகிச்சை முடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்ப உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதலமைச்சர் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார். முதலமைச்சர் நலமாக இருக்கின்றார்கள். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com