உயிரிழந்த லோகநாயகி
உயிரிழந்த லோகநாயகி

‘இயற்கைக்குத் திரும்புகிறோம் என்ற பெயரில் பெண்களை படுகொலை செய்யக் கூடாது!’

யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து, வீட்டிலேயே சுகப்பிரசவத்துக்கு முயல்வது ஆபத்தென்பதை மீண்டும் ஒரு சம்பவம் கன்னத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது.

தர்மபுரியை அடுத்துள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்த வேளாண்மை பட்டதாரியான லோகநாயகி பிரசவத்தின் போதே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அநியாயமாக உயிரிழந்திருக்கிறார். அதற்கு முக்கியமான காரணம் இயற்கையின் மீதான காதலும் யூடியுப் வீடியோவும் தான்.

இயற்கையான முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்ள நினைத்த தம்பதிகளின் விபரீத முடிவு, ஒரு இளம் தாயின் உயிரைப் பறிக்க, அவர் பெற்றெடுத்த குழந்தை உயிருடன் இருக்கிறது. லோகநாயகிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்தவர் அவருடைய கணவர் மாதேஷ்.

இது குறித்து மருத்துவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம், “இது தவறான அணுகுமுறை. யூடியூப் மூலம் பிரசவம் பார்ப்பது என்பது எப்படி இயற்கையாகும்? மருத்துவம் என்றே அது செயற்கைதான். இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் வேதிப்பொருட்களால் ஆனது. இன்றைய சூழலில், தேவைக்கேற்ப வேதிப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

பிரசவத்தின் போது ஆடு, மாடு என்ன மருத்துவமனைக்கா? செல்கிறது என்று சிலர் கேட்கிறனர். இது தவறான வாதம். இப்போது, ஆடு, மாடுகளுக்கென்று கால்நடை மருத்துவம் உள்ளது. விலங்களுக்கு அதிநவீன சிகிச்சை செய்யும் அளவிற்கு மருத்துவம் வளர்ந்திருக்கிறது.” என்றவர், பிரசவ முறைகள் பற்றி பேசத் தொடங்கினார்.

மருத்துவர் ரவீந்திரநாத்
மருத்துவர் ரவீந்திரநாத்

”மனித இடுப்பு எலும்பின் சுற்று வட்டம் குறைவாக இருந்தால், இயற்கை பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லை. சுற்று வட்டம் பெரிதாக இருந்தால் தான் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று சிசேரியன் அறுவை சிகிச்சை பேறுகால இறப்பைத் தடுத்திருக்கிறது. அது தொடர்பான தொழில்நுட்பம் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், மரபு வழியாக வரும் நோய்களைக் கூட தடுக்க முடியும்.

இயற்கைக்குத் திரும்புகிறோம் என்ற பெயரில் பெண்களை படுகொலை செய்யக் கூடாது. எங்கு வேண்டுமானாலும் பிரசவம் பார்த்துக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு உண்டு. அந்த உரிமையை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. மருத்துவ அறிவியலை நம்பவேண்டும். தெரிந்தே தவறு செய்யக் கூடாது. நவீன மருத்துவம் வணிகமாகிவிட்டது அதனால், மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

மாற்று மருத்துவ முறையில் ஈடுபடுபவர்கள் சிலர், நவீன மருத்துவம் பற்றி தவறான பிரச்சாரத்தை ஏற்படுத்துகின்றனர். அதன் விளைவுகள் தான் இந்த மரணம்” என்கிறார் மருத்துவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com