ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
Published on

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

இரா.செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்த முன்னணி ஒளிப்பதிவாளர், தேசிய விருது பெற்ற இயக்குநர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். கட்டடப் பொறியியல்  படிப்பை முடித்த இவர், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகத் தன் சினிமா பயணத்தைத் தொடங்கியவர்.

பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி' (2007),  தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி, தாரை தப்பட்டை, ஜோக்கர், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். ‘டூலெட்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மிலன் சர்வதேச திரைப்பட விழாவில் இதற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் பெற்றவர்.

அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரைப் பற்றிய ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார். ஆனந்த விகடன் இதழில் உலகத் திரைப்படங்கள் குறித்து இவர் எழுதிய தொடர், பின்னர் 'உலக சினிமா' என்ற பபுத்தகத் தொகுப்பாக வெளியானது.

இளம் திரை ஆர்வலர்களுக்காக திரைப்படப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இப்பள்ளியின் மூலம் பயின்ற 34 மாணவர்கள் ஒரே நேரத்தில் 34 சுயாதீனத் திரைப்படங்களை இயக்கும் புதிய முயற்சியை சமீபத்தில் தொடங்கினார்.

குறைந்த பொருள்செலவில் தரமான படங்களை தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு செய்துகாட்டிய ஒரு படைப்பாளியை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com