தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்; எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
Published on

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

* கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழகத்துக்கான கல்வி, நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

* தமிழகத்தின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமைக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்ப வலியுறுத்தி தீர்மானம்.

* கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த எம்.பி.க்கள் கூட்டம் குறித்து சமூக ஊடகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மத்திய பா.ஜ.க. அரசின் 11 ஆண்டுகள் என்பது, மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, எங்கும், எதிலும் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, முக்கியமாக, மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது எம்.பி.க்கள் மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும், தமிழகத்தின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை, கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தி உள்ளேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com