‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.
பாமகவின் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸுக்கு இடையே கடந்த சில நாள்களாக மோதல் நிலவி வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இரண்டு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதனிடையே, ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்தப்படும் என்று அன்புமணி அறிவித்திருந்தார்.
சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தனது அனுமதி இல்லாமல் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.