ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது. இதனிடையே ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற பெங்களூரு அணிக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்சிபி அணிக்கு வாழ்த்துக்கள்! ஆச்சரியங்கள் நிறைந்த சீசனில் ஒரு சிலிர்ப்பூட்டும் முடிவு. இந்த கனவை பல ஆண்டுகளாக சுமந்து வந்து கிங் விராட் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது.
அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சரின் இந்த வாழ்த்து செய்தி விவாதத்தை கிளப்பியுள்ளது. தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், பெங்களூர் அணிக்கு முதலமைச்சர் எப்படி வாழ்த்து தெரிவிக்கலாம் எனவும், சென்னை அணி வெற்றி பெற்றபோது சித்தராமையா வாழ்த்து கூறினாரா? என்ற வகையில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல், இப்படி பெருந்தன்மையோடு வாழ்த்து சொல்லத் தமிழ்நாட்டு முதலமைச்சரால் மட்டுமே முடியும் என சிலரும் தங்களின் கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.