சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ ஆர்பி உதயகுமார் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி நடத்திய இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த முறையும் பங்கேற்கவில்லை.
கடந்த மாதம், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அதற்கு அவர் காரணம் கூறியிருந்தார்.
கடந்த 14 ஆம் தேதி, தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் சந்தித்தார்.
இந்நிலையில், இன்றும் எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுக எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார் செங்கோட்டையன். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.